
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட 9 குற்றவாளிக்கும் சாகும் வரை சிறைத் தண்டனை அளித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு பெண்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் வரவேற்பு அளித்துள்ளனர்.
அந்த வகையில் சி.பி.எம் சார்பாகவும் பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்புக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடபாக அக்கட்சியின் மாநில செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டையே அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம். குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை வழங்கியிருப்பதை சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநிலக்குழு வரவேற்கிறது.
பாதிக்கப்பட்ட பெண்கள் வழக்கின் இறுதிக் கட்டம் வரை உறுதியாக நின்று, சவால்களை எதிர்கொண்டு உறுதியாக சாட்சியம் அளித்தது என்பதும் போற்றுதலுக்குரியதாகும். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்முறைகள் மனித சமூகத்தின் மாண்புகளுக்கு எதிரானது; இழிவானது. ஆகவே குற்றவாளிகள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்குவதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் நீதி கிட்டும் போராட்டத்தில் துணை நிற்பதும் நாகரீக சமூகத்தின் கடமை.
பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிக்கான உறுதியை வெளிப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதி செய்வது பெண்களுக்கு பெரும் நம்பிக்கையை தருவதாகும். சுய கௌரவம், குடும்ப கௌரவம் பாதிக்கப்படும் என்றெல்லாம் வன்முறைக்கு இலக்காகும் பெண்களை மௌனித்துப் போகச் செய்யும் போக்கை இப்பெண்கள் முறியடித்து இருக்கிறார்கள். அவர்களை சிபிஐ(எம்) மனதாரப் பாராட்டுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அல்லது அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கி அக்குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு மறுவாழ்வு அளித்திட வேண்டும். நீதிக்கான போராட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக வாதாடிய வழக்கறிஞர்களுக்கும், மக்களைத் திரட்டி களத்தில் போராடிய அரசியல் கட்சிகள், அமைப்புகள் அனைத்திற்கும் சிபிஐ(எம்) பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.