
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளி ஒன்பது பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது இந்த தீர்ப்பை வரவேற்று புதுச்சேரி மாநில திமுக மகளிர் அணி அமைப்பாளர் காயத்ரி ஸ்ரீகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில், 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி வழங்கிய தீர்ப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒடுக்குவதற்கு மகத்தான முன்னுதாரணமாக அமைந்துள்ளது. இந்த தீர்ப்பு, பெண்களின் பாதுகாப்பையும் நீதியையும் உறுதிப்படுத்துவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் அர்ப்பணிப்பை பறைசாற்றுகிறது.
அதிமுக ஆட்சியின் கீழ் நடந்த இந்த கொடூரமான பாலியல் வன்கொடுமை, அந்த ஆட்சியின் பெண்கள் பாதுகாப்பு குறித்த அலட்சியத்திற்கு பொள்ளாச்சியே சாட்சியாக நிற்கிறது. இவ்வழக்கில், 250-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழித்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, ஆதாரங்களுடன் குற்றத்தை நிரூபித்து, உரிய தண்டனை பெறுவதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், திமுக மகளிரணி மாநிலச் செயலாளர் எம்.பி கனிமொழியும் மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்கு புதுச்சேரி மாநில திமுக மகளிரணி தனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வழக்கில், திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், மற்றும் ‘நக்கீரன்’ பத்திரிக்கையின் அர்ப்பணிப்பு மிக்க புலனாய்வு பணிகள் இந்த தீர்ப்பை சாத்தியப்படுத்தியுள்ளன. குறிப்பாக, ‘நக்கீரன்’ பத்திரிக்கை இவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கை முதல் உண்மைகளை வெளிக்கொணர்ந்து, நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்தது பாராட்டத்தக்கது. இதற்காக, அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒடுக்குவதற்கு இது போன்ற உறுதியான தீர்ப்புகள் மிகவும் அவசியம். இத்தீர்ப்பு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்குவது மட்டுமல்லாமல், பெண்கள் தைரியமாக முன்வந்து புகாரளிக்கவும், சமூகத்தில் பயமின்றி வாழவும் ஒரு தூண்டுதலாக அமையும். புதுச்சேரி மாநில திமுக மகளிரணி, அனைத்து பெண்களையும் தைரியமாக புகாரளிக்க அழைப்பு விடுக்கிறது. எந்தவொரு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானாலும், மௌனமாக இருக்காமல், சட்டத்தின் உதவியை நாடி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியை பெற்றுத் தரவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிரணி எப்போதும் முன்நிற்கும். இந்த தீர்ப்பு, பெண்களின் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு மேலும் வலு சேர்க்கும் என நம்புகிறோம். பெண்கள் பாதுகாப்பான, மதிப்புமிக்க சமூகத்தை உருவாக்குவதற்கு இது போன்ற தீர்ப்புகள் தொடர்ந்து எழுதப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.