Skip to main content

சந்தையூர் சுவர்: உண்மை நிலை என்ன?

Published on 06/04/2018 | Edited on 06/04/2018


 

santhaiyur Wall


மதுரை மாவட்டம், பேரையூர் வட்டத்தில் உள்ளது சந்தையூர். இங்கு "ஆதிதிராவிடர்களுக்கான இந்திரா காலனியில் காளியம்மன் கோயிலில் அருந்ததியர் வழிபட, ஆதிதிராவிடர் அனுமதிக்கவில்லை' என்று  தொடங்கியது பிரச்சினை. அனுமதிக்க மறுத்ததுடன், கோயிலைச் சுற்றி சுவரையும் எழுப்பியுள்ளனர். "அந்தச் சுற்றுச்சுவரை இடித்து பொது பயன்பாட்டுக்கு விடவேண்டும்' என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. "நான்கு மாதங்களுக்குள் சுவரை அகற்றி, சுமுகமான முடிவு எட்டப்பட வேண்டும்' என்று நீதிமன்றம் விதித்த கெடு ஜனவரி 19-ஆம் தேதி முடிவுற்றது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து அருந்ததிய மக்கள் குடும்பத்தோடு, அருகில் உள்ள மலைக்குச் சென்று கூடாரம் அமைத்து தங்கினர்.
 

இந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் பிரச்சனைக்குரிய சுவரை இன்று காலை இடிப்பதாகவும், பொது இடத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்ட இருதரப்பினரும் ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின. அன்றுபடி இன்று காலை 10.30 மணி அளவில் கோட்டாச்சியர் சுகன்யா தலைமையில் அந்த சுவரின் ஒரு பகுதியை இடிக்கும் பணி நடைப்பெற்றது.
 

இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் கொண்ட குழு ஆய்வு நடத்தியது. அந்தக் குழுவில் சமூகப்பணி செயல்பாட்டாளர் சூர்யா, தலித் கேமரா நிறுவனர் Dr. ரவிச்சந்திரன், பத்திரிக்கையாளர் கதிரவன், ஆய்வு மாணவர் ராம்குமார், ஆய்வாளர் பிரபாகரன், ஆய்வு மாணவர் பிரபாகர் இடம் பெற்றிருந்தனர். 
 

ஆய்விற்குப் பின்னர் இவர்கள் வெளியிட்ட அறிக்கையில், கோயிலைச் சுற்றியுள்ள சுவர் “தீண்டாமைச் சுவர்” தான் என்று புரிந்துகொள்ள முடிகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

மேலும் அந்த அறிக்கையில், சந்தையூர் கிராமத்தில் தேவர், செட்டியார், பிள்ளை, ஆசாரி, நாவிதர், வண்ணார், தேவேந்திரர், அருந்ததியர், ஆதிதிராவிடர் என பல்வேறு சாதிச் சமூகங்கள் வாழ்கிறார்கள்.
 

அருந்ததியர் மற்றும் ஆதிதிராவிடர்கள் அருகருகே வாழ்ந்தாலும், ஆதிதிராவிடர் குடி, அருந்ததியர் குடி என்று தனித்தனி உட்பகுதிகளாக இருக்கிறது. அரசு ஆவணத்தில் இந்திரா நகர் என்று இருந்தாலும், பொதுவாக இந்திரா காலனி என்றே எல்லோராலும் அழைக்கப்படுகிறது. அங்கு சுமார் 70 லிருந்து 80 அருந்ததியர் குடும்பங்களும், 30 லிருந்தது 35 ஆதிதிராவிடர் குடும்பங்களும் வசித்து வருகிறார்கள். அப்பகுதியில் மூன்று தேவர் குடும்பமும் வாழ்கின்றனர். தேவேந்திரர் அருகிலுள்ள கீழப்பட்டி கிராமத்தில் வாழ்கின்றனர். இதர சாதி சமூகங்கள் ஊர்ப் பகுதியில் வாழ்கின்றனர். 
 

சந்தையூர் கிராமத்தில் நிறையக் கோவில்கள் இருந்த போதிலும், அருந்ததியர் மற்றும் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் ராஜகாளியம்மன் கோவில், காளியம்மன் கோவில் மற்றும் விநாயகர் கோவில் என மூன்று கோவில்கள் உள்ளன. இவற்றில், ராஜகாளியம்மன் கோவில் ஆதிதிராவிடர் மக்களும், காளியம்மன் கோவில் அருந்ததியர்களாலும் வழிபடுகின்றனர். விநாயகர் கோவிலை இரு சமூதாய மக்களும் வழிபடுகின்றனர். 
 

காமராஜர் ஆட்சி காலத்தில், இந்த ஊரில் ஆதிதிராவிடர் குடியிருப்பை உருவாக்க, 1 ஏக்கர் 60 சென்ட் நிலத்தை, அரசு தந்தது. அதில், 1 ஏக்கர் 05 சென்ட் நிலம், தனிநபர் பட்டாக்களாக 14 அருந்ததியர் குடும்பத்திற்கும், 7 ஆதிதிராவிடர் குடும்பத்திற்கும் கொடுக்கப்பட்டது. மீதம் உள்ள 55 சென்ட் நிலம், இரண்டு சமூக பொது பயன்பாட்டுக்கு விடப்பட்டது. ராஜகாளியம்மன் கோவில் சுற்றி உள்ள பொது நிலம் தான் இப்பொழுது பிரச்சினைக்கு உரிய இடமாக அங்கு இருக்கிறது. ஆதிதிராவிடர்கள் இதை தங்களுக்குரியது என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள். அருந்ததியர்கள் இதை பொது [நத்தம் புறம்போக்கு] நிலம் என்று சொல்கிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 
 

சார்ந்த செய்திகள்