Skip to main content

குறையாத தக்காளி விலை; ஆலோசனைக்குப் பின் முடிவெடுத்த அமைச்சர் பெரியகருப்பன்

Published on 31/07/2023 | Edited on 31/07/2023

 

 'Sales of tomatoes in 500 ration shops'- Minister Periyakaruppan interview

 

தமிழகத்தில் மீண்டும் தக்காளி விலை அதிகரித்திருக்கும் நிலையில், தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே தமிழகத்தில் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை நடந்துவரும் நிலையில், மேலும் 200 கடைகளில் விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கூட்டத்தில் அத்துறையைச் சேர்ந்த செயலாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன், ''தமிழகத்தில் நாளை முதல் 500 நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். தொடர்ந்து தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எங்களைப் பொறுத்தவரைக்கும் 35 ஆயிரம் கடைகளில் விற்கலாம் என்றால் கூட தக்காளி கிடைப்பது என்பது சிக்கலாக இருக்கிறது. நாள் ஒன்றுக்கு நியாயவிலைக் கடைகளில் சராசரியாக 50 கிலோ என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல மொத்தமாகப் பண்ணைப் பசுமை கடைகளின் மூலமாக அம்மா உணவகம் போன்ற மற்ற இடங்களில் விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சராசரி விற்பனையை விட நான்கு மடங்கு விற்பனை இப்பொழுது கூட்டுறவுத்துறை சார்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 

இயற்கையினுடைய கோளாறுதான் இந்த விலை உயர்வுக்குக் காரணம். இது எல்லாத் துறைகளும் ஒருங்கிணைந்து செய்யக்கூடிய வேலை. முதலில் விவசாயப் பெருமக்கள் அவர்கள் உற்பத்தி செய்யக்கூடிய காய்கறிகள், கனிகள் ஆகியவற்றை எந்தெந்தக் காலகட்டங்களில் பயிர் செய்தால் நியாயமான விலை கிடைக்கும், இதுபோன்ற தட்டுப்பாடுகள் தவிர்க்கப்படும் என்பதை எல்லாம் வேளாண்துறையின் மூலமாக அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு பிரச்சாரமாக எடுத்துச் செல்ல வேண்டும். கூட்டுறவுத்துறையைப் பொறுத்தவரை விவசாயிகளுக்குப் பொருளாதார ரீதியில் அவர்களுக்குத் தேவையான நிதி வசதிகளைச் செய்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். தொடர்ந்து வேளாண்துறையோடு கூட்டுறவுத்துறை, உணவு வழங்கல் துறை கலந்து பேசி இருக்கிறோம். உயர்மட்ட அளவில் பேசி முடித்தவுடன் அடுத்த ஆண்டு பருவங்களில் உற்பத்தி குறைகின்ற நேரங்களில் நாம் எப்படி அந்த உற்பத்தியைப் பெருக்குவது என்ற முயற்சியில் ஈடுபட வேண்டும். எப்படிக் கடந்து வர வேண்டும் என்பதற்கான திட்டங்கள் எதிர்காலத்தில் தயாராக இருக்கும்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்