Skip to main content

தேடப்படும் ராக்கெட் ராஜா..! சிங்காரம் பாணியில் நாட்டுவெடிகுண்டு வீசி மீண்டும் ஒரு கொலை..! (Exclusive)

Published on 27/02/2018 | Edited on 27/02/2018
murder 1
கொலை செய்யப்பட்ட பேராசிரியர் செந்தில்குமார், கொலை சம்பவம் நடந்த வீடு


ரியல் எஸ்டேட் விவகாரத்தில் நெல்லை மாவட்டத்திலுள்ள மிகப்பெரிய வி.வி.ஐ.பி.யின் வீட்டிற்குள் புகுந்து அவரது மகனையே மிரட்ட, வேறொரு சமூகத்தினரின் கூலிப்படையால் மிரட்டப்பட்டவர் குறிவைக்கப்பட்டு கொலையாகியிருக்கின்றார் மருமகன்.

 

திங்கட்கிழமை காலையன்று, பாளையங்கோட்டை அண்ணாநகரில் மிளகாய்ப்பொடி தூவி, நாட்டுவெடிகுண்டு வீசி கல்லூரிப் பேராசிரியர் கொலைச்செய்யப்பட்டிருக்கின்றார் எனும் தகவல் வரவே, அவ்விடத்திற்கு விரைந்தது மாநகரக் காவல்துறை. சுமார் அரை ஏக்கர் அளவில் காம்பவுண்ட் சுவர் கட்டி முடிக்கப்பட்டத் தோட்டத்தில் சிறியதாக கூரை வீடு. வாசலில் தொடங்கி, வீட்டின் உள்வரையும் ரத்தச்சிதறல்கள். "காலை சரியாக 7.30மணி இருக்கும். நானும் தாமிரபரணி பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக வேலைப்பார்த்து வரும் எனது மருமகன் செந்தில்குமாரும் பேசிக்கொண்டிருந்தோம். எங்கிருந்தோ வந்த ஆறுபேர் வந்த வேகத்தில் மிளகாய்ப்பொடியை தூவியும் நாட்டுவெடிகுண்டு வீசியும் கொலை செய்ய முயற்சி செய்தாங்க. என்னைய குறி வைச்சு வந்தவங்க என் மருமகனைப் போட்டுட்டாங்க. வந்தவனுங்க யாரெனத் தெரியும்." என காவல்துறையிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவ்விடத்திற்கு உரிமையாளரான, 1996ம் வருடம் கொடியங்குளத்தில் மிகப்பெரிய சாதிக் கலவரம் ஏற்பட்ட பொழுது அன்று பரபரப்பாகப் பேசப்பட்ட கொடியங்குளம் குமார்.

 

"பசுபதிபாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொலைகளில் சம்பந்தப்படுத்தப்பட்டவரும், சுபாஷ் பண்ணையாரின் நண்பருமான ராக்கெட் ராஜா-தான் இந்தக் கொலைக்குக் காரணாமாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில், ராக்கெட் ராஜா-வின் அண்ணனான வழக்கறிஞர் பால கணேஷிற்கும் கொடியங்குளம் குமாருக்கும் நெல்லை தூத்துக்குடி சாலையிலுள்ள கோடிக் கணக்கான மதிப்பிலான இடத்தில் பிரச்சனை இருந்திருக்கின்றது. ஆறு நபர்கள் கொண்ட அந்த இடத்தில் ஒருவர் கொடியங்குளம் குமாருக்கு பவர் எழுதிக்கொடுத்துவிட, அதனை வைத்து இது தன்னுடைய இடம் எனக் கூறி குமார் பிரச்சனை செய்ததாகவும், இதுக்குறித்து பஞ்சாயத்து பல முறை நடந்ததாகவும் அதன் விளைவாகவே குமாருக்கு குறிவைக்கப்பட வேறொருவர் பலியாகியுள்ளார். கடந்த வருடம் இதே பிப்ரவரி மாதம் 24ம் தேதியன்று விசாரணைக்காக போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட பசுபதி பாண்டியனின் ஆதரவாளர் சிங்காரத்தின் படு கொலையும் இதே மாதிரி நடந்ததால், அன்று சிங்காரம் கொலையை நடத்திய அதே டீம் தான் இந்தக் கொலையை நடத்தியிருக்க வேண்டும் என்ற ரீதியில் தான் ஆரம்பக்கட்ட விசாரணையை துவக்கியது மாநகர காவல்துறை. இருப்பினும் எங்களது தரப்பில் அதி கவனமாக இருக்க வேண்டும் என நாங்கள் முன்னரே குமாரை எச்சரித்திருந்தோம்" என்றார் நம்மிடம் பேசிய உளவு அதிகாரி ஒருவர்.
 

Aquest Rocket Raja
                      ராக்கெட் ராஜா


கள்ளத்துப்பாக்கி விவகாரத்தின் பொழுது தப்பித்த ராக்கெட் ராஜா இந்த கொலையால் சிக்கியிருக்கின்றார் என்பது நிதர்சனமான உண்மை. காவல்துறையும், பேராசிரியர் செந்தில்குமார் கொலை வழக்கில் ராக்கெட் ராஜாவை முதன்மைக்குற்றவாளியாக்கி அவர் உள்ளிட்ட 9 பேர் மீது தற்பொழுது வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றது. இந்தக் கொலைக்கு சாதி சாயம் பூசி மீண்டுமொரு நீண்ட வன்முறைக்கு தயாராகியுள்ளது சம்பந்தப்பட்ட இரு சமூகமும் என்பதால் நிம்மதியிழந்திருப்பது என்னவோ தென்மாவட்ட மக்கள் தான்.

சார்ந்த செய்திகள்