Skip to main content

“கள்ளச்சாராய விற்பனைக்கு ஏலம் நடந்துள்ளது” - கண்டன ஆர்ப்பாட்டத்தில் ராஜேந்திரபாலாஜி 

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
 Rajendra Balaji said An auction has been held for t sale of illicit liquor

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்குப் பொறுப்பேற்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தி, விருதுநகரில் அதிமுக நடத்திய கண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது. 

அதில் பேசிய முன்னாள் அமைச்சர்  கே.டி.ராஜேந்திரபாலாஜி, “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 54 பேர்  உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மருத்துவமனையில் 150- க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலின்  முதலமைச்சராகப் பதவியேற்ற பின்பு கள்ளச்சாராய விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ். தொடர்ந்து சட்டமன்றத்தில் குரல் எழுப்பி வருகிறார். போதைப் பொருள், கள்ளச்சாராயம்  தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. தமிழக மக்களின் கண்ணீர் ஆட்சியாளர்களுக்குத் தெரியவில்லை. உலகமே உற்றுப்பார்க்கின்ற வகையில்  தமிழ்நாடு பேசுபொருளாகிவிட்டது.

அப்பாவி பொதுமக்கள் உடல் வலியைப் போக்குவதற்கு பழக்கப்பட்டுப்போன  மது அருந்தும் பழக்கத்தை விடமுடியாதவர்களாக உள்ளனர். விலை  குறைவான கள்ளச்சாராயத்தை கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதி மக்கள்  வாங்கிக் குடித்துள்ளனர். அதனால், ஊரே இன்று சுடுகாடாக மாறிவிட்டது.  தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே முதலமைச்சருக்குத் தெரியவில்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் தோற்றாலும், அதிமுக ஓட்டு சதவீதத்தில் அதிகம் பெற்றுள்ளது. அதிமுக வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.  திமுக தோல்வியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. திமுகவுக்கு தனித்து நிற்கும் தைரியம் கிடையாது. கூட்டணிக் கட்சி வைத்து ஒரு தற்காலிக வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். அப்படி இருந்தும் நாம் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியிலும் தென்காசி தொகுதியிலும் நல்ல வாக்குகளை பெற்றுள்ளோம். விருதுநகர் தொகுதியில் 4379  ஓட்டு வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றியை இழந்திருக்கிறோம் அதிலும்  பிரச்சனை இருக்கிறது. வெற்றியை நாம் தொடவில்லை என்று யாரும் சொல்ல முடியாது. வெற்றி நம் பக்கம்தான் இருக்கிறது. அதிமுக ஆட்சி அமைத்து இ.பி.எஸ். மீண்டும் முதலமைச்சராவார்.  நாம் ஆட்சிக்கு வந்தவுடன்,  நமக்கு  எதிராகச் சதி செய்த அனைவரும் சட்டத்திற்கு முன்பாக நிறுத்தப்படுவார்கள்.  என்றைக்கும் அதிமுக காரன் கோழை அல்ல. அதிமுகவில் உள்ளவர்களின்  நாடி  நரம்புகளில்  எம்ஜிஆர், ஜெயலலிதா இருவருடைய வீரம் இருப்பதால் எந்தக்  கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது.  

முதல்வர் ஸ்டாலின் ஏன் பதவி விலக வேண்டும் என்பது குறித்து இ.பி.எஸ். விளக்கமாகப் பேசியிருக்கிறார். கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதியில் காவல்துறையினர் ஆய்வு செய்யச் சென்றபோது எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராய ஊறல்கள் தான். இந்தக் கள்ளச்சாராயத்தைக் குடிப்பதால் மக்கள் உயிர் போகுமென்பது இந்த அரசுக்கு தெரியாதா ? கல்வராயன் மலை இன்று சுற்றுலா தலமாக மாற்றப்படும் என்று முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுகிறார்.கல்வராயன் மலை இன்று கள்ளச்சாரய மலை ஆகிவிட்டது. காவல்துறையினரின் கைகள் யாரால் கட்டப்பட்டுள்ளது? அந்தந்த பகுதிகளில் சாராயம் விற்பனை செய்ய ஏலம் விடப்பட்டிருக்கிறது. இதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு காவல்துறை அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்த  அரசியல்வாதி  யார்? மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை  கண்காணிப்பாளரை மாற்றிவிட்டால் இந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடுமா? இதற்கு நடவடிக்கை எடுக்காமல் விட்டது யார்? கண்டுகொள்ளாமல் விடச் சொன்னது யார்? எனவே,  காவல்துறையைக்  கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் தான் இதற்கு முழு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய  வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோது நாங்கள் ஆட்சிக்கு  வந்தவுடன் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று சொன்னாரா?  இல்லையா?  தற்பொழுது அதைச் செய்தாரா ? அவரது தங்கை கனிமொழி இளம் விதவைகள்  தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளனர்.  இதற்குக் காரணம் இ.பி.எஸ். என்றும்,  அதனால் திமுகவுக்கு ஓட்டு போடுங்கள் என்றும் பேசினார்.  திமுக ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் முடிந்த நிலையில், முதல்வர்  ஸ்டாலின் இதுவரைக்கும்  மதுவிலக்கை அமல்படுத்தினாரா?  இதை விட்டுவிட்டு கள்ளச்சாராயம் குடித்து  இநந்தவருக்கு ரூபாய் 10 லட்சம் தருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு  சிவகாசி அருகே பட்டாசு வெடிவிபத்தில் 10 பேர் இறந்ததற்கு ரூபாய் மூன்று  லட்சம் தான் கொடுத்தார்.  நாட்டை காக்கும் ராணுவ வீரர் மரணம் அடைந்தால்  ரூபாய் 5 லட்சம்தான் தருகிறார். இந்த நடவடிக்கைகளைப்  பார்க்கும்போது  கள்ளச்சாராயத்தை  நீங்களே ஊக்கப்படுத்துவது போல் தெரிகிறது.  

பட்டாசு  தொழிற்சாலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்கு அரசு  30 லட்சம் ரூபாய் தர வேண்டும். ஊர் மக்கள் சந்தோஷமாக இருக்க,  தனது அழகிய மேனியைக் கருக்கி உயிரை விடுபவன் தான் பட்டாசுத் தொழிலாளி. அவர்களுக்கு கவலை கிடையாதா? அவர்களது பிள்ளைகளின் படிப்புக்கு வழியில்லையே? ஆனால் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களைத் தேடித்தேடிச் செல்கிறீர்கள். சட்ட விரோதமாக தொழில் செய்தால் ரூபாய் 10 லட்சம் தருகின்றீர்கள். சட்டத்திற்கு  உட்பட்டு தொழில் செய்து இறந்தால் ரூபாய் 3 லட்சம் தருகின்றீர்கள். இது எந்த விதத்தில் நியாயம்?  இங்கு சர்வாதிகார ஆட்சி நடக்கிறது.  கேட்பதற்கு ஆள் இல்லை. 40 தொகுதியிலும் ஜெயித்து விட்டோம்.  அடுத்த சட்டமன்றத்திலும் 234 தொகுதிகளில் வென்று விடுவோம் என்ற அகம்பாவத்தில் திமுக இருந்து  வருகிறது. மக்கள் என்ன ஏமாளியா? கோமாளியா? மக்கள் பார்த்துக்  கொண்டுதான் இருக்கிறார்கள்.

சரியான நேரத்தில் தக்க பதிலடி கொடுப்பார்கள். நாடாளுமன்றத் தேர்தல் முக்கியமில்லை என்பதால், சட்டமன்றத்தில்  அதிமுகவுக்கு வலுவாக ஆதரவளிப்பார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 234 தொகுதியிலும் எளிதாக வெற்றி பெறும் .  இந்தக் கள்ளச்சாராய விஷயத்தில் திமுக காரனுக்குத் தொடர்பு உள்ளது என்று  இ.பி.எஸ். கூறி வருகிறார்.  இதை விசாரிக்க திமுக அரசு முன்வரவில்லை.  ஒருமுறை பெருந்தலைவர் காமராஜர்  ‘கொலை செய்பவனால் ஒரு குடும்பம்  மட்டுமே பாதிக்கும். ஆனால் ஊரில் கள்ளச்சாராயம் விற்பவனால் பல்வேறு  குடும்பங்கள் நாசமாகப் போகும்.’ என்று கடுமையாகக் கண்டித்துள்ளார். 

எனவே, கள்ளச்சாராயத்தைத் தடுக்கத் தவறிய முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதுதான் அடித்தட்டு மக்களின்  கோரிக்கை, பொதுமக்களின் கோரிக்கை, அதிமுகவின் கோரிக்கை,  இபிஎஸ்ஸின் கோரிக்கை, நல்ல மனிதர்களின் கோரிக்கை. கள்ளச்சாராயத்தால் பல உயிர்களை இழந்த கள்ளக்குறிச்சிக்கு இதுவரை மு.க.   ஸ்டாலின் செல்லவில்லை. ஏழைகளின் உயிர் என்ன அவருக்குக் கரும்பா? தப்போ, சரியோ, விவரம் தெரியாமல் இறந்தவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக்கூட முதல்வர் போகவேண்டாமா? இந்த விஷயத்தில் 20 பேர் தான் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இன்னும்  நிறையக் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் உள்ளனர். எனவே அவர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்.” என்றார்.  

சார்ந்த செய்திகள்