நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிகழ்ச்சி ஒன்றில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் தந்தை பெரியார் பேசியதாக சில சொற்களைக் கூறினார். தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாக பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு இன்ஸ்பெக்டர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. திராவிடர் கழகம், தி.மு.க., த.பெ.தி.க., திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சீமான் மீது புகார்கள் அளித்தன.
இதற்கிடையே மதுரை கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீமான் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தந்தை பெரியார் கூறியதாகக் கருத்து ஒன்றை வெளியிட்டார். இது சமூக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. சமூக நீதிக்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட தந்தை பெரியார் குறித்து அடிப்படை ஆதாரம் இன்றி சீமான் பேசியுள்ளார். இது தொடர்பாக மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. எனவே இந்த புகாரின் அடிப்படையில் அண்ணாநகர் காவல் நிலையத்தில் சீமான் மீது வழக்குப்பதிவும் செய்ய உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் அமர்வில் இன்று (10.01.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வாதிடுகையில், “தந்தை பெரியார் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு, குறிப்பாகப் பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்காகப் பெருமளவில் சேவையாற்றி உள்ளார். அவரைப்பற்றி சீமான் அவதூறாகப் பேசியது ஏற்கத்தக்கதல்ல. எனவே அவர் மீது குற்றவியல் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” வாதிடப்பட்டது. இதனைப்பதிவு செய்துகொண்ட நீதிபதி, “சீமான் தெரிவித்த கருத்துகள் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த விவாகரத்தில் மதுரை அண்ணா நகர் காவல் துறையினர் மனுதாரரின் புகாரைப் பெற்றுக் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தார்.