உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் நகரைச் சேர்ந்தவர் மொய்னுதீன் (52). இவருக்கு அஸ்மா (45) என்ற பெண்ணுடன் திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில், மொய்னுதீனின் சகோதரர் சலீம் தனது மனைவியுடன் மொய்னுதீன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு கிடந்ததால், அக்கம்பக்கத்தினரின் உதவியோடு பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார்.
அப்போது, மொய்னுதீன், அவரது மனைவி அஸ்மா, மகள்கள் அஃப்சா(8), அஜிசா(4) மற்றும் அதீபா (1) ஆகிய 5 பேரும் கொல்லப்பட்டு கிடந்துள்ளனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், மொய்னுதீன் வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அதில், மொய்னுதீன் மற்றும் அவரது மனைவி அஸ்மாவின் உடல்கள் போர்வையில் சுற்றப்பட்டும், மூன்று பெண் குழந்தைகளின் உடல்களும் பெட்டிக்குள் அடைத்து வைக்கப்பட்டும் கிடந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், அஸ்மாவின் சகோதரர் ஷமிம் அளித்த புகாரின் பேரில், அஸ்மாவின் இளைய மைத்துனர் நஸ்ரானா மற்றும் அவரது இரண்டு சகோதரர்கள் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.