Skip to main content

“எவருக்கும் இனி நடக்கக்கூடாது” - விஷால் மக்கள் நல இயக்கம் அறிக்கை

Published on 09/01/2025 | Edited on 09/01/2025
vishal manager condemn regards vishal health update news

விஷால் தற்போது துப்பறிவாளன் 2 பட பணிகளில் பிஸியாக இருக்கிறார். அதே சமயம் அவர் நடிப்பில் உருவாகி 12 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த மதகஜராஜா தற்போது வருகிற பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் இப்படத்தின் புரொமோஷன் பணிகள் சமீபத்தில் தொடங்கப்பட்டது. அப்படி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஷால், அவர் முகம் வீங்கி காணப்பட்டார். மேலும் அவர் பேசும் போது மைக்கை பிடித்து கூட சரியாக பேச முடியாத அளவிற்கு அவரது கை நடுங்கியது. அதற்கான காரணம் வைரஸ் காய்ச்சல் என அந்நிகழ்ச்சியிலே தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் விஷால் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது மனதை கலங்கடித்துவிட்டது. அவர் சீக்கிரம் குணமடைய வேண்டி பலரும் பதிவிட்டு வந்தனர். 

இதையடுத்து விஷால் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதில் விஷால் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் முழுமையாக அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் விஷால் உடல்நிலை குறித்து அவரது மேலாளர் மற்றும் விஷாலின் மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “கடந்த சில நாட்களாக விஷாலின் உடல் நிலை குறித்து பலர் பல்வேறு அவதூறுகளையும் தங்களுக்கு தோன்றிய கதைகளையும், கற்பனைகளையும் ஊடகங்கள் என்ற பெயரால் விளம்பரம் தேடி வரும் ஒரு சில விஷம எண்ணம் கொண்ட நபர்களால் பொய்யான செய்தியை மட்டும் பரப்பி வருகின்றனர். தற்போது இதனை எழுதும் நோக்கம் அவர்களுக்கு பதில் கூற வேண்டும் என்ற எண்ணம் இல்லை,

மாறாக இவ்வளவு பொய்களையும், வதந்திகளும் பரப்பி அதை முற்றிலும் ஏற்றுக்கொள்ளாமல் அதே சமயத்தில் எங்கள் தலைவர் விஷாலின் மீது பாசம் கொண்ட தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா மக்களுக்கும் அவர் மீது அளவில்லா அன்பு கொண்ட ரசிகர்கள், மக்கள் நல இயக்கத்தின் உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறோம். விஷாலுக்கு உண்மையில் என்ன நடைபெற்றது என்பதை மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்பும்  ‘ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகள்’ நம்பிக்கைமிக்க நேர்மையான பத்திரிக்கையாளர்களுக்கு மத்தியில் ஊடக போர்வை போர்த்திய சில போலி தற்குறிகள் தங்களுக்கு கிடைக்கும் சொற்ப காசுகளுக்காக அறத்தை மறந்து, தர்மத்தை மறந்து உண்மையை அறியாமல் பொய்யான போலியான கற்பனைகளை அவதூறாக பரப்பி வருகின்றனர்கள்.

அவர்களை எப்போதும் மக்கள் நிச்சயம் அடையாளம் கண்டு கோமாளியாக்குவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. அவர்களுக்கு எங்களின் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். இங்கு நாங்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்க தயாராக இல்லை. அதே வேளையில் இன்று எங்கள் தலைவர் விஷாலுக்கு ஏற்பட்ட அவதூறுகள், கற்பனை கதைகளைப் பரப்புவது போல் இனி வரும் காலங்களில் வேறு எவருக்கும் நடைபெறக் கூடாது என்பது மட்டுமே எங்களுடைய நோக்கம்” என்றுள்ளார். 

சார்ந்த செய்திகள்