Skip to main content

இடிந்து விழுந்த கொள்ளிடம் பாலம்... கடும் அதிர்ச்சியில் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள்

Published on 24/01/2022 | Edited on 24/01/2022

 

Dilapidated Kollida bridge Workers and officials in shock

 

விக்கிரவாண்டி-தஞ்சை இடையே ஏற்கனவே இருந்து வந்த தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி பல ஆண்டுகளாக மெதுவாக நடந்துவருகிறது. சமீபத்தில்தான் மேற்படி சாலைப்பணிகள் வேகமெடுத்து நடக்க ஆரம்பித்தது. இந்தச் சாலையின் நெடுகில் பல்வேறு இடங்களில் ஆறுகள், ஓடைகளைக் கடப்பதற்காக அதன் குறுக்கே பாலங்கள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அரியலூர்-தஞ்சை மாவட்டங்களுக்கு இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அணைக்கரை பகுதியில் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு சுமார் 100 கோடி செலவில் புதிய பாலத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

இந்தப் பாலம் கட்டுமான பணியில் 40 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பாலத்தை இணைப்பதற்காக உருவாக்கப்பட்ட தூண்களில் 4 மற்றும் 5வது தூண்களுக்கு இடையே கான்கிரீட் தளம் இணைக்கும் பணி நடந்து வந்தது. இந்த கட்டுமானப் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் யாரும் எதிர்பாராத நிலையில், மேற்படி பாலத்தில் இரண்டு தூண்கள் இடையே சுமார் 250 அடி நீளத்திற்கு இணைப்பதற்கான கான்கிரீட் தளம் திடீரென இடிந்து கொள்ளிடம் ஆற்றில் விழுந்தது. இந்தச் சம்பவம் அங்கிருந்த தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், யாருக்கும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உயரதிகாரிகள் ஆலோசனையின்படி, ஆற்றில் இடிந்து விழுந்த பகுதிகளை உடனடியாக அப்புறப்படுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

 

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள அணைக்கரை, தென்கரையில் இருந்து கொள்ளிடத்தில் புதிய பாலம் கட்டும் பணி தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் டெண்டர் விடப்பட்டு ஒப்பந்தக்காரர் மூலம் நடைபெற்று வருகிறது. இதில் 15க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அந்தப் பணியின் போது கிரேன் மூலம் கான்கிரீட் தளத்தைத் தூண்களுக்கு இடையே பொருத்தும் பணியைச் செய்து வந்தனர். இதில் எதிர்பாராத விதமாக கிரேன் கம்பி அறுந்ததால் கான்கிரீட் சிமெண்ட் தளம் இடிந்து விழுந்துள்ளது" என விசாரணையில் தெரிய வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பாலம் மிகவும் தரமான வகையில் கட்டப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். நான்கு வழிச்சாலையில் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மிக நீண்ட தூரம் பாலம் கட்டப்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்