Skip to main content

பொல்லானுக்கு மரியாதை! கொங்கு மண்ணில் அருந்ததியினர் சமூகம் உற்சாகம்!

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

 


நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இந்தியா முழுக்க ஆங்காங்கே சிறு சிறு குழுக்கள் ஆங்கிலேய ஆட்சி அதிகாரத்தை எதிர்த்து வீரமிக்க பல போர்களை நடத்தியது. அதில் ஒன்று தான் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள ஓடாநிலை கிராமத்தில் தீரன் சின்னமலை தலைமையில் இயங்கிய ஒரு குழு ஆங்கிலேயர்களை எதிர்த்து மூன்று போர்களை நடத்தியது. பிறகு பிரிட்டீஸ் படைகளால் தீரன் சின்னமலையும் அவரது குழுவில் இருந்த சிலரும் கொல்லப்பட்டனர்.

 

p

 தீரன் சின்னமலையின் குழுவைச் சேர்ந்தவர் பொல்லான் என்பவர். இவர் ஆங்கிலேயர்களின் நிர்வாக அலுவலகத்தில் தீரன் சின்னமலையின் ஒற்றராக பணிபுரிய அனுப்பப்பட்டார். அங்கிருந்து ஆங்கிலேயர்களின் ரகசிய செயல்பாடுகளை செருப்பில் வைத்து தைத்து அதை தீரன் சின்னமலைக்கு அனுப்பி வைத்தார். இதன் மூலம் ஆங்கிலேய படைகளின் படையெடுப்பை முன்கூட்டியே தீரன் சின்னமலை தெரிந்து கொண்டு இரன்டு முறை போர் புரிந்து ஆங்கிலேய படைகளை வீழ்த்தினார் என்பது வரலாற்று குறிப்பாக உள்ளது. 

 

பொல்லான், தீரன் சின்னமலையின் உளவாளி என தெரிந்து கொண்ட ஆங்கிலேய அரசாங்கம் ஆடி - 1 ந் தேதி பொல்லானை சுட்டு கொன்றது. பிறகு ஆடி-18 அன்று தீரன் சின்னமலையை சங்ககிரி கோட்டையில் வைத்து தூக்கிட்டு கொன்றது. 

 

பிற்காலத்தில் தீரன் சின்னமலை கொங்கு வேளாள கவுண்டர்களின் தியாகியாக அச்சமூகத்தால் போற்றப்பட்டு அவரது நினைவு நாள் கொங்கு பகுதிகளில் எழுச்சியாகவும், அரசு விழாவாகவும்  நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில் தீரனின் படையில் இருந்து ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பொல்லானுக்கு எந்த மரியாதையும் இதுவரை அரசு சார்பில் நடத்தப்படவில்லை.   இவ்விவகாரத்தை கடந்த மூன்று நான்கு வருடங்களாக எடுத்துக் கொண்டு அரசிடம் போராடி வந்தது அருந்ததியினர் இளைஞர் பேரவை. இதை நீதிமன்றத்திற்கும் கொண்டு செல்ல சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சுதந்திர போராட்டத்தில் தீரன் சின்னமலை படை பிரிவில் இருந்தவர் தான் பொல்லான்.   ஆகவே அவரது நினைவு நாளை அரசு மரியாதை செலுத்தும் என நீதிமன்றத்தில் பதில் கொடுத்தது. " இவ்வருடம் முதல் பொல்லான் நினைவு நாள் அரசு சார்பில் அனுஷ்டிக்கப்படுகிறது. மேலும் அவருக்கு மணிமண்டமும் முழு உருவ வென்கல சிலையும் வைக்க வேண்டும்" என்றார் அருந்தியினர் அமைப்பை சேர்ந்த வடிவேல் என்பவர்.

l

 

தீரன் சின்னமலை கவுண்டர் சமூகம்.  பொல்லான் தலித் பிரிவில் அருந்ததியினர் சமூகம். கொங்கு மண்ணில் தங்கள் சமூக தலைவருக்கு அரசு மரியாதை பெற்றதில் அச்சமூகத்தினர் உற்சாகமடைந்துள்ளனர்.


பொல்லான் நினைவு நாளான ஆடி - 1 ந் தேதி 17. 7.19 புதன்கிழமையன்று ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசு அலுவலகத்தில் அவரது படம் வைத்து மாலை அணிவித்து அரசு அதிகாரிகள் மரியாதை செலுத்துகிறார்கள். ஆடி - 18 அன்று தீரன் சின்னமலை நினைவு நாளன்று அவரது சிலைக்கு கொங்கு அமைச்சர்களான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் வரிசையாக சென்று மரியாதை செய்வது வழக்கம். இம்முறை தீரன் சின்னமலையின் படை தளபதி பொல்லான் நினைவு நாளுக்கு எத்தனை அமைச்சர்கள் மரியாதை செலுத்தப் போகிறார்கள் என்பது புதன்கிழமை தெரிந்துவிடும்.
 

சார்ந்த செய்திகள்