Skip to main content

தொழிற்சாலைகளை மூடும் எண்ணம் இல்லை - மத்திய ராணுவ அமைச்சர் அறைகூவல் ! 

Published on 21/01/2019 | Edited on 21/01/2019
n

 

திருச்சியில்  மத்திய இராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பங்கேற்ற பாதுகாப்பு வழிதடம் அமைக்கப்படும் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் 3100 கோடி ரூபாய் முதலீட்டில் தனியார் நிருவனங்களை இந்த துறையில் இணைந்து செயல்படுவதற்கான அடிப்படை நிகழ்ச்சியாக இது பார்க்கப்படுகிறது. 

 

உலகில் அதிக அளவில் ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. மேக் இன் இந்தியா திட்டத்தின் படி, ஆயுதங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவற்றை முழுக்க முழுக்க உள் நாட்டிலேயே உற்பத்தி செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. 

அதன்படி, தமிழகம் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாதுகாப்பு வழித்தடம் அமைக்கப்படும் என கடந்த 2018-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் (பட்ஜெட்) அறிவிக்கப்பட்டிருந்தது. உத்தரப்பிரதேச பாதுகாப்பு வழித்தடம் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு பாதுகாப்பு வழித்தட தொடக்க விழா, திருச்சியில் ஜனவரி 20 நடைபெற்றது. சென்னை, சேலம், ஓசூர், கோவை, திருச்சி ஆகிய நகரங்களை உள்ளடக்கிய இந்த பாதுகாப்பு வழித்தட திட்டத்தை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தொடங்கி வைத்தார். 

 

n


அதேபோல், கோவை கொடிசியாவில், ராணுவத் தளவாடப் பொருட்கள் கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தை அவர் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில், சுமார் மூன்றாயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு திட்டங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியானது. 


நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீத்தாராமன், "தமிழகத்தை முன்னேற்ற வேண்டும் என்ற மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது கனவை பிரதமர் மோடி தான் நிறைவேற்றி வருகிறார். கோவாவில் நடந்த ராணுவ கண்காட்சியை தமிழகத்தில் நடத்தவும் மோடி அனுமதி வழங்கினார். தமிழக அரசின் ஒத்துழைப்போடு மத்திய அரசு இத்தகைய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.


திருச்சியில் துப்பாக்கித் தொழிற்சாலையும், அதேபோல் கோவையில் உள்ள தொழிற்சாலையும் சிறப்பாக செயல்படுகிறது. அதற்குள்ளாக தொழிற்சாலைகளை மூடப்போகிறோம், எல்லோரும் வேலை இல்லாமல் போக போகிறது என்று பொய் பிரச்சாரங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் சொல்கிறேன். இத்தகைய தொழிற்சாலைகளை மத்திய அரசு மூடிவிடும் என்று தவறான பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. அத்தகைய திட்டமே மத்திய அரசிடம் இல்லை. எந்த தொழிற்சாலைகளையும் மூட மாட்டோம். 

 

n


பல்வேறு ராணுவத் தளவாட தொழில் நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் முறையில் பொருட்களை தயாரிக்க திருச்சியில் வசதிகள் உள்ளன. இந்த வாய்ப்பை மாநில அரசும், திருச்சியில் உள்ள தொழில் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நிலை மாறினால் ராணுவ பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமே ஏற்படாது. 

 

ரஃபேல் ஒப்பந்தத்தை பொறுத்தவரை ஆப்செட் (offset) என்ற திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆப்செட் திட்டம் தற்போது துவங்கப்பட்டுள்ள ராணுவ வழித்தட திட்டத்திற்கு உதவியாக இருக்கும். இந்த வழித்தடத்தில் புதிய தொழில் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது" என்று பேசினார். 

 

இந்த நிகழ்ச்சியில் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் வளர்மதி, எம்பி.க்கள் குமார், ரத்தினவேல், மருதைராஜா, திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி, ராணுவ உற்பத்தித் துறை செயலாளர் அஜய் குமார் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் சுமார் 500 நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.


 

சார்ந்த செய்திகள்