
'100 நாள் வேலை உறுதி திட்டத்தின் (MGNREGA) மூலம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி நிதியை வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் அனைத்து ஒன்றியங்களிலும் தலா இரண்டு இடங்களில் மார்ச் 29ஆம் தேதி ( 29.3.2025 - சனிக்கிழமை) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்' என திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பின்படி தமிழகத்தின் பல இடங்களில் திமுக சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாலவந்தம் கிராமத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்து கொண்டார். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் 'கிராம சபை கூட்டம் நடப்பதாக பெண்களை அழைத்து வந்து, அந்த கூட்டத்தை அப்படியே 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என மாற்றி விட்டு உள்ளீர்கள்' என கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து பாஜகவைச் சேர்ந்த மீனா என்ற அந்த பெண் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் உடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் 'கிராம சபை கூட்டம் நடக்குதுன்னு சொன்னாங்க. கிராம சபை கூட்டத்தை நீங்கள் ஆர்ப்பாட்டம் என போட்டு விட்டீர்கள் இது முதல் தவறு. கிராம சபை கூட்டத்தை ஏன் ஆர்ப்பாட்டமாக மாற்றினீர்கள்? கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லுங்கள்' என பேச, அமைச்சர் ராமச்சந்திரன் அந்த இடத்திலிருந்து நகர்ந்து சென்றார். இதனால் அங்கு சிறிது சலசலப்பு ஏற்பட்டது.