
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் ஜி.நடுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆதி திராவிடர் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக ரூ.1 கோடியே 55 லட்சம் மதிப்பில் சமுதாய கூடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு ஆதிதிராவிடர் நலத்துறை செயற் பொறியாளர் பச்சைவடிவு தலைமை தாங்கினார். ரெட்டியார்சத்திரம் முன்னாள் தலைவர் சிவகுருசாமி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுப்புலெட்சுமி சண்முகம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணி வரவேற்று பேசினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி சமுதாய கூடத்தை திறந்து வைத்தார். அதன் பின்னர் அண்ணல் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய பின்பு பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார். அதில் அவர், “இந்தியாவின் சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள் விழாவில் இந்த சமுதாய கூடத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். காரணம் எல்லோருக்கும் எல்லாம் அனைவரும் சமம் என்ற கருத்தை கொண்டவர் மறைந்த மாமேதை அண்ணல் அம்பேத்கர். அவர் வழியில் ஆட்சி செய்பவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் வந்த திராவிட மாடல் ஆட்சி நாயகன் கழகத்தலைவர் மு.க. ஸ்டாலின்.
இன்று கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு குடிதண்ணீர் வசதி, ரேஷன் வசதி, தெரு விளக்கு வசதி, மருத்துவ வசதி உட்பட அனைத்து வசதிகளும் தடையின்றி கிடைப்பதோடு மருத்துவ வசதி இல்லம் தேடி வருகிறது. பொதுமக்கள் கூட்டுறவு மருந்தகங்களில் குறைந்த விலையில் மருந்துகளை வாங்கி பயன்பெற வேண்டும். இப்பகுதியைச் சேர்ந்த பலர், தங்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் வீடுகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் மனு கொடுத்தால் போதும் அவர்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் வீடுகள் வழங்கப்படும். இது தவிர சேதமடைந்த வீடுகளை புதுப்பிக்க நிதியுதவியும் வழங்கப்படும். மக்களின் நலன் காத்து வரும் திராவிட மாடல் ஆட்சி நாயகன் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு நாம் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

அதன் பின் அமைச்சரிடம் ஆதிதிராவிடர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர், ‘மாற்றுக் கட்சியைச் சேர்ந்த ஊரக மன்றத் தலைவர் இருந்ததால் ஊராட்சி செயலாளர் நந்தகோபால் தங்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் வீடுகள் வழங்க ஊராட்சி செயலர் மறுப்பதாக’ கூறி புகார் செய்தனர். உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு அமைச்சர் ஐ.பெரி யசாமி, பொதுமக்களின் புகார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். உடனடியாக சமுதாய கூடத்திற்கு ஊராட்சி செயலாளர் நந்தகோபால் வரவழைக்கப்பட்டு அவரிடம் ஆத்தூர் சட்டமன்ற முகாம் அலுவலக அலுவலர் வடிவேல் முருகன், மற்றும் ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணி ஆகியோர் விசாரணை செய்தனர். அப்போது சரமாரியாக பொதுமக்கள், ஊராட்சி செயலாளர் நந்தகோபால் மீது புகார் செய்ததோடு அவரை மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். மாற்று கட்சியைச் சேர்ந்த தலைவரோடு சேர்ந்து கொண்டு பொதுமக்களை அலைக்கழிப்பதாக குறை கூறினார்கள். அதன் பின்னர் அலுவலர் வடிவேல் முருகன், பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்றதோடு கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் மூலம் கோரிக்கை மனு கொடுத்தால் அவர்களுக்கு உடனடியாக வீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். அமைச்சர் ஐ.பெரியசாமி உடனடியாக நடவடிக்கை எடுத்தததற்கு ஆதிதிராவிட பகுதி மக்கள் மனதார பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் முன்னாள் தலைவர் ராஜேஸ்வரி தமிழ்ச் செல்வன், சட்டமன்ற உறுப்பினர் முகாம் அலுவலக அலுவலர் வடிவேல் முருகன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், அரசு ஒப்பந்தகாரர் மதுரை வடிவேல் முருகன், கன்னிவாடி பேரூராட்சி மன்றத் தலைவர் தனலெட்சுமி சண்முகம், மாவட்ட வர்த்தகரணி துணைச் செயலாளர் பொன்முருகன், வடக்கு ஒன்றிய அவைத் தலைவர் வெள்ளையன், துணை செயலாளர் பொன்மணி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் முருநெல்லிக்கோட்டை சின்னு, புதுச் சத்திரம் மெர்சி, நீலமலைக் கோட்டை ராதா தேவி சாமிநாதன், ஜி. நடுப்பட்டி ஹேமபிரியா மகேந்திரன், மாவட்ட பிரதிநிதி புதுச்சத்திரம் இளங்கோ, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நாகலெட்சுமி ரமேஷ், சுமதி கணேசன், காளீஸ்வரி மலைச்சாமி, தொண்டரணி துணை அமைப்பாளர்கள் கும்மம் படடி விவேகானந்தன், அண்ணாதுரை, கதிரையன்குளம் பாலன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் புதுக்கோட் டை ரமேஷ், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் செல்வம், பொறியாளர் அணியைச் சேர்ந்த காளீஸ்வரி, தி.மு.க பிரமுகர் கோயில் கண்ணன், உட்பட திமுக நிர்வாகிகள், இளைஞரணியினர் பலர் கலந்து கொண்டனர்.