Skip to main content

’என் அப்பாவின் மரணம் இயற்கையானதல்ல..’ - லாட்டரி மார்ட்டின் நிறுவன காசாளர் பழனி மரணத்தில் மகன் பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

 

லாட்டரி மார்ட்டினின் நிறுவனங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வருமானவரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில் வருமான வரித்துறையின் விசாரணையில் இருந்த காசாளர் பழனி பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

m


  இந்நிலையில், பழனியின் மகன் ரோகின் குமார், தனது தந்தையை, மார்ட்டின் நிறுவனத்தில் பணிபுரியும் இருவர் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாகத் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

 

கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை பகுதியில் வசித்து வருபவர் பழனி (42). இவர் மார்ட்டினின் ஹோமியோபதி கல்லூரியில் காசாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
கடந்த 30ஆம் தேதி தமிழகம் முழுவதும் மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனங்கள்,வீடுகள், ரிசார்ட்டுகளில் என  பல இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கோவை மாவட்டத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் நடைபெற்றது. அதேபோல மார்ட்டின் நிறுவனங்களில் பணிபுரியும் நிர்வாகத்தினருடன் தொடர்புடைய முக்கிய நபர்களிடமும் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டது. இதில் குறிப்பாக கவுண்டம்பாளையம் அருகே உள்ள  ஹோமியோபதி கல்லூரியில் பல்வேறு தரப்பினரிடம் வருமான வரித்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர். 

 

l

 

 குறிப்பாக காசாளர் பழனியை தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.   பழனியை விசாரணை முடிந்து வருமான வரித்துறையினர் விடுவித்தனர். இந்த நிலையில் நேற்று காரமடை காவல் எல்லைக்குட்பட்ட வெள்ளியங்காடு அருகே உள்ள குட்டையில் காசாளர் பழனி பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
 

வருமான வரித்துறையினர் சோதனையில் இருந்து  விடுவிக்கப்பட்ட நிலையில் காசாளர் பழனி பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது உடல் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

 

 பழனி மரணம் தொடர்பாக, இரு பிரிவுகளின் கீழ் காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்கொலைக்கு தூண்டுதல், சந்தேக மரணம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வருமான வரித்துறையினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இன்று பழனியின் மகன் ரோகின் குமார், தனது தந்தையின் உடலை, நீதிபதி முன்னிலையில், தங்கள் தரப்பு மருத்துவருடன் உடற்கூறாய்வு செய்ய உத்தரவிடக் கோரி, பழனிசாமியின் மகன் ரோகின் குமார், கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, தனது தந்தையை, மார்ட்டின் நிறுவனத்தில் பணிபுரியும் இருவர் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாகத் தெரிவித்தார்.  வீட்டில் தற்கொலை செய்து கொள்ளாமல், தனது தந்தை நீண்ட தூரம் சென்று தற்கொலை செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும் நீரில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டவருக்கு காயம் ஏற்பட்டது எப்படி என்று அவர்  பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார்.
 


 

சார்ந்த செய்திகள்