சீர்காழி அருகே மர்ம காய்ச்சலுக்கு 3 வயது குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனையில் போதிய மருந்து வசதிகள் இல்லாததால் சரியான சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்காவிற்கு உட்பட்ட மீனவர் கிராமமான பழையாரைச் சேர்ந்தவர் ரமேஷ். மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஹரிணி மூன்று வயதேயான அந்த குழந்தை அதே கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார்.
இந்தசூழலில் ஹரிணிக்கு காய்ச்சல் ஏற்பட்டு கடந்த இரண்டு நாட்களாக சீர்காழி அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் மருத்துவர்கள் பற்றாக்குறை, அலட்சியம், என சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இரண்டு நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை ஹரிணிக்கு, எந்த குழந்தைகள் நல மருத்துவரும் வந்து பார்க்கவுமில்லை, சிகிச்சை அளிக்கவுமில்லை, அதோடு ஞாயிற்றுக்கிழமை என்பதால் மருத்துவர்களும் யாரும் வராததால் சிகிச்சை அளிக்க யாருமில்லை, செவிலியர் மட்டுமே அவ்வப்போது வந்து சிகிச்சை அளித்துள்ளார், ஆனாலும் சிகிச்சை பலினில்லாமல் ஹரிணி காய்ச்சலால் துடியாய் துடித்தவர் திங்கட்கிழமை காலை அரசு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
" போதிய சிகிச்சை அளிக்காமல் அரசு மருத்துவமனை அலட்சியம் செய்ததால் எங்களின் குழந்தை உயிரிழந்ததாக உறவினர்கள் குமுறுகின்றனர்.
அவர்கள் மேலும் கூறுகையில்," ஹரிணிக்கு என்ன காய்ச்சல் என்று கூறாமல் இரண்டு நாட்களாக என்ன மருத்துவம் அளிக்கப்பட்டது என்பதையும் தெரிவிக்காமல் நோட்டு பேப்பரை கிழித்து அதில் சீல் வைத்து குழந்தை உயிரிழந்ததாக மருத்துவமனை மருத்துவர் சான்று அளித்துள்ளார். இறந்த குழந்தையை வீட்டிற்கு எடுத்து செல்ல கூட மருத்துவமனையில் அமரர் வாகனம் தரமால் தனியார் வாகனத்தை வாடகைக்கு எடுத்துவந்து பிஞ்சு குழந்தையின் உடலை எடுத்து வந்தோம். திருச்சி அருகே உள்ள திண்டுக்கல்லில் ஒரு குழந்தை குழாயில் விழுந்து இறந்தது, அந்த குழந்தையும் எங்கள் குழந்தைதான் ஆனாலும் சில ஆதங்கத்தைக்கூறிதான் ஆகவேண்டும், அந்த குழந்தையை மீட்க பலகோடி ஒதுக்கீடு செய்து தமிழக அமைச்சர்கள் முழுவதும் சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் கூடி நின்று சிதைந்துபோன உடலை அள்ளிக்கொடுத்தாங்க அதை நாங்கள் கண்ணீரோடு பார்த்து அழுதோம், ஆனால் நல்லபடியா விளையாடிய குழந்தை சாதாரண காய்ச்சலால் சிகிச்சைக்கு அரசு மருத்துமனைக்கு அழைத்துவந்து பினமாக தூக்கிசெல்கிறோம், இவங்க உயிரெல்லாம் உயிரில்லையா, இதுபோல நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் எத்தனைக் குழந்தைகள், எவ்வளவுபேர் தவிக்கிறாங்க அவங்களுக்கு உரிய மருத்துவ வசதிசெய்துகொடுக்காத அரசு என்ன நல்ல அரசாக இருக்கமுடியும், எங்கள் குழந்தை ஹரிணி போயிடுச்சி இனி அவரை போல மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்துள்ள குழந்தைகளை காக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்று பொறிந்து தள்ளினர்.