
திமுக பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக வேலூர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய இருப்பதாக இது தொடர்பாக வாக்களர் பட்டியலுடன் வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த பூஞ்சோலை சீனிவாசன் என்பருடைய சிமெண்ட் குடோனியில் இருந்து சுமார் 11 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக காட்பாடி காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் தாமோதரன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு வேலூர் நீதித்துறை முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்த வழக்கு கடந்த 3 முறை விசாரணைக்கு வந்தது.அப்போது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆஜராகவில்லை. அச்சமயத்தில் அவர் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்ததன் காரணமாக அவர் ஆஜராக முடியவில்லை என்ற வாதததை அவரது வழக்கறிஞர்கள் முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (28.04.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கதிர் ஆனந்த் எம்.பி. இந்த வழக்கு தொடர்பாக இன்று நேரில் ஆஜராகி இருக்கிறார். அதே சமயம் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தாமோதரன் மற்றும் பூஞ்சோலை சீனிவாசன் ஆகிய இருவரும் இன்றைய விசாரனைக்கு ஆஜராகவில்லை. அதே சமயம் இந்த வழக்கின் நீதிபதி விடுப்பில் இருப்பதால் பொறுப்பு நீதிபதி விசாரணை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.