அமைப்பாளர்கள் என்று பெயருக்குத்தான் நாங்கள் இருக்கிறோம். மகளிர் அணியில் உறுப்பினர்களைச் சேர்க்க படிவங்களை வாங்கிப் போயிருக்கிறோம். ஆனால், உறுப்பினர்களைச் சேர்க்கக்கூட எங்களுக்கு திமுக செயலாளர்கள் அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள் என்று மாநில மகளிரணி தலைவர் கனிமொழி முன்னிலையில் அமைப்பாளர்கள் புலம்பித் தீர்த்திருக்கிறார்கள்.
2019ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது, பணியாற்றுவது குறித்து திமுக மகளிரணி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர்களுக்கு சென்னை அன்பகத்தில் பயிற்சிமுகாம் நடைபெற்றது.
இந்தப் பயிற்சி முகாமில் தமிழ்நாடு முழுவதுமிருந்து மாவட்ட அமைப்பாளர்கள் கலந்துகொண்டார்கள். அவர்கள் மத்தியில் தேர்தலில் எப்படி பங்காற்றுவது என்பது குறித்து செல்வகணபதி பேசினார். பேசி முடித்ததும் அமைப்பாளர்களிடம் கருத்துகளை பகிரும்படி கேட்டார். அப்போது பேசிய பல மாவட்ட அமைப்பாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள்கூட தங்களை மதிப்பதில்லை என்றும், மகளிரணிக்கு உறுப்பினர்களைச் சேர்ப்பதில்கூட இடையூறு செய்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்கள்.
அதன்பிறகு, டாக்டர் எழிலன் நாகநாதன், வழக்கறிஞர் பூங்குழலி உள்ளிட்டோர் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், எதிர்கொள்ளும் சட்டப்பிரச்சனைகள் குறித்து பேசினார்கள். கனிமொழி திராவிட இயக்கம் தொடர்பான கேள்விகளைக் கேட்டு அமைப்பாளர்கள் பதில் அளிக்கும் வகையில் க்விஸ் நிகழ்ச்சியை நடத்தினார்.