கும்பகோணம் மாநகராட்சியின் மேயராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சரவணன் என்பவர் இருந்து வருகிறார். இவருக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.இத்தகைய சூழலில் தான் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று (30.12.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 54 தீர்மானங்கள் தொடர்பாகக் கோப்புகளை, மேயர் சரவணனிடம் திமுக கவுன்சிலர் குட்டி தட்சிணாமூர்த்தி என்பவர் கேட்டுள்ளார்.
அதற்கு மேயர் சரவணன் மாமன்ற கூட்டம் முடிந்ததாகக் கூறி அவர் அங்கிருந்து எழுந்து அவரது அறைக்குச் செல்ல முயன்றார். அச்சமயத்தில் கவுன்சிலர் குட்டி தட்சிணாமூர்த்தி கோப்புகளை காமிக்காமல் தங்கள் அறைக்குச் செல்லக்கூடாது என வேகமாக ஓடிச் சென்று அறைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது மேயர் கவுன்சிலரை ஏறி மிதித்து விட்டு தனது அறைக்குச் செல்ல முயற்சித்தாக கூறப்படுகிறது. அப்போது திமுக கவுன்சிலர், மேயர் தன்னை கொல்ல முயற்சி செய்வதாகக் கூச்சலிட்டார்.
அதே சமயம் மேயரும் தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறி தரையில் படுத்து, தன்னை காப்பாற்ற வேண்டும் என்று ஆணையரிடம் தொடர்ந்து அலறினார். இதனால் அங்குச் சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் மேயரை சமாதானம் செய்து அவரது அறைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது திமுக கவுன்சிலர்கள் கோப்புகளைக் கேட்டால் மேயர் நடிப்பதாகவும் கோப்புகளை எடுப்பதற்குப் பயப்படுவதாகவும் குற்றம் சாட்டினர். இதனால் கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.