Skip to main content

“சிறையில் இரவு 2.30 மணி வரை கூட படிப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன்...” - அமைச்சர் ஐ.பெரியசாமி 

Published on 17/10/2022 | Edited on 17/10/2022

 

"I used to study even till 2.30 in the night in jail." - I.Periyaswamy

 

திண்டுக்கல் டட்லி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் இலக்கிய களம் சார்பில் புத்தகத் திருவிழாவின் நிறைவு விழா மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு, நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கும், புத்தகத் திருவிழா தொடர்பாக அதிக தொகை சேமிப்பு செய்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் கேடயங்கள் மற்றும் திருக்குறள் ஒப்புவிப்பு போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கேடயங்கள் வழங்கினார். 

 

அதைத் தொடர்ந்து விழாவில் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த திமுக ஆட்சியில் துணை முதலமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நூலகம் அமைக்கும் திட்டத்தைக் கொண்டு வந்து செயல்படுத்தி அனைத்து பொதுமக்களும் புத்தகம் படிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார். 

 

கடந்த 10 ஆண்டு காலமாக அதில் பெரிய அளவில் இடைவெளி ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் விழாக்களில் பங்கேற்பவர்களுக்கு பரிசுப் பொருட்கள், சால்வை அணிவிப்பதை விட புத்தகங்களை நினைவுப் பரிசாக வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். தனக்கு பரிசாக வந்த புத்தகங்கள் அனைத்தையும் பல்வேறு நூலகங்களுக்கு வழங்கியுள்ளார். மேலும், தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் புத்தக வாசிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புத்தகத் திருவிழாக்கள் நடத்த உத்தரவிட்டுள்ளார். 

 

சென்னையில் மட்டும் நடத்தப்பட்ட புத்தகத் திருவிழா அரசு சார்பில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல்லில் நடத்தப்பட்ட இப்புத்தகத் திருவிழா பொதுமக்களுக்கு மிகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. அதிக அளவிலான பொதுமக்கள் இங்கு வருகை தந்து பார்வையிட்டுள்ளனர். சுமார் 3 லட்சம் புத்தகங்கள் ரூ.1.5 கோடி அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. புத்தகங்கள் படிப்பது ஒருவருடைய சிந்தைனைகளை தூண்டும். ஒருவருடைய வாழ்க்கைத் தரம், வாழ்க்கை அமைப்பு, வாழ்க்கைக்குத் தேவையான வழிகாட்டும் நெறிமுறைகள் ஆகியவை நமக்கு கிடைக்கிறது. புத்தகம் படிப்பது நம் அறிவை கூர்மையாக்கும், சிந்தனையைத் தூண்டும், எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான சிந்தனைகளை உருவாக்கும். நமது சிந்தனைகள் வளர வேண்டுமானால் நாம் தொடர்ந்து புத்தகங்கள் படிக்க வேண்டும். 

 

இந்த புத்தகத் திருவிழாவில் தமிழ்நாடு அரசு ஜவுளித்துறை ஆணையர் முனைவர் மா.வள்ளலார் எழுதிய ‘திண்டுக்கல்லில் எழுதிய வரலாறு’ என்ற நூல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் வரலாறு பற்றி புத்தகம் எழுதியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நானும் வரலாற்று மாணவன்தான். வரலாற்றை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்காக ஏராளமான புத்தகங்களை படிக்க வேண்டும். நான் சிறைச்சாலையில் இருந்தபோது என்னை பார்க்க வருபவர்களிடம் புத்தகம் வாங்கி வருமாறு சொல்லி சுமார் 50 புத்தகங்கள் வரை எனக்கு கொண்டு வந்து கொடுத்தார்கள். புத்தகங்களை இரவு 2.30 மணி வரை கூட படிப்பதை வழக்கமாக அப்போது கொண்டிருந்தேன். அனைத்துப் புத்தகங்களும் நமது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உள்ளன. எனவே புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஒவ்வொருவரும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் புத்தகம் படிக்க வேண்டும். பொறுமையாக அமைதியாக படிக்க வேண்டும். புத்தகங்கள் படிப்பதன் மூலம் ஒவ்வொருவருடைய வாழ்க்கைப் பாதையும் நல்ல முறையில் அமையும்” எனக் கூறினார்.

 

இவ்விழாவில் மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, இலக்கிய களம் மனோகரன், இலக்கிய களம் செயலாளர் இராமமூர்த்தி, இலக்கிய களம் நிர்வாக செயலாளர் கண்ணன், திண்டுக்கல் இலக்கிய களம் பொருளாளர் மணிவண்ணன் உட்பட அதிகாரிகளும், கட்சி பொறுப்பாளர்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்