Skip to main content

“தமிழ்நாட்டில் மிகப்பெரிய திருப்பம் நடைபெற உள்ளது” - எல்.முருகன்

Published on 25/05/2024 | Edited on 25/05/2024
 Tamil Nadu is about to take a huge turn says L. Murugan

தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஒரு திருப்பம் நடைபெறவுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

திருச்சி திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில்  மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “400 க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி மீண்டும் பிரதமராவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஐந்து கட்டத் தேர்தல் நிறைவடைந்துள்ளது. அதில் நிச்சயம் 310 இடங்களை கைப்பற்றும் எனத் தகவல் வந்துள்ளது. 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஒரு வரலாற்றுச் சாதனையைப் பாரதிய ஜனதா செய்ய உள்ளது.

தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஒரு திருப்பம் நடைபெற உள்ளது. யாரும் இதுவரை எதிர்பாராத வண்ணம் அரசியல் புரட்சி இந்தத் தேர்தலில் நடைபெற இருக்கின்றது. 4-ஆம் தேதி உங்களுக்கே தெரியும். தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய வெற்றியைத் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாங்கள் சமர்ப்பிப்போம்” என்றார்.

இதையடுத்து, தமிழக முதல்வர் மத்தியில் இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைக்க போகிறது என்று கூறி வருகிறாரே என்ற கேள்விக்கு, “அது அவர்களுடைய பகல் கனவாகவே இருக்கப்போகிறது. காங்கிரஸ் 40 இடங்களில் கூட வெற்றி பெறாது திமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கப் போகிறது. பிரதமர் பேசியதை சரியாக புரிந்து கொள்ளாமல் தமிழக முதல்வர் பொதுமக்களிடையே பொய்யாக திரித்து பேசி வருகிறார். பிரதமர் என்ன பேசினார் என்பதை முதலில் முதல்வர் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று பதிலளித்தார்.

நாம் தமிழர் கட்சி சீமான் என்னை விட அதிகமாக அவர்கள் வெற்றி பெற்று விட்டால் நான் கட்சியைக் கலைத்து விடுகிறேன் எனச் சொல்லி உள்ளாரே என்ற கேள்விக்கு, “அவர் கட்சியைக் கலைக்க தயாராகி விட்டார் என்று நினைக்கிறேன்” என்று பதிலளித்தார்.

சார்ந்த செய்திகள்