
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அண்மையில் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்ததை தொடர்ந்து தமிழக பாஜக தலைமை மாற்றப்படுவதாக கூறப்பட்டது. இத்தகைய சூழலில் தான் மத்திய உள்துறை அமைச்சர் 2 நாள் பயணமாக நேற்று (10.04.2025) இரவு 10.20 மணியளவில் சென்னை வருகை தந்தார். கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியுள்ள அமித்ஷா இன்று காலை 35க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனும் அமித்ஷா ஆலோசனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

அண்மையில் காலமான குமரி அனந்தனின் மகள் தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுவிட்டு பின்னர் அங்கிருந்து மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டிற்கு அமித்ஷா சென்றார். அங்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சந்திப்பு மேற்கொண்டார். மறுபுறம் யார் அடுத்த பாஜக தலைவர் என்பதற்கான விருப்ப மனு தாக்கல் தொடங்கியது. செய்தியாளர் சந்திப்பு மேடையில் 'தேசிய ஜனநாயக கூட்டணி' என வைக்கப்பட்டிருந்த பேனர் திடீரென மாற்றப்பட்டு பாஜக நிர்வாகிகள் கூட்டம் என மாற்றப்பட்டது.

இப்படி பாஜகவில் அதிரிபுதிரியான காட்சிகள் அரங்கேறி வரும் நிலையில் அமித்ஷா தங்கியுள்ள ஹோட்டலுக்கு ஆட்டோவில் வந்த அகோரி ஒருவர் அமித்ஷாவை சந்தித்தே ஆகவேண்டும் என சலம்பல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அகோரி 'அமித்ஷாவிடம் ஒரு முக்கிய செய்தி சொல்லணும். இந்தியா அமெரிக்காவுடன் நிக்கணுமா சீனாவுடன் நிக்கணுமா? சீனாவை நாம் பக்கச்சுகிட்டா சீனா ஸ்ரீலங்கால இருக்க அம்மன்தோட்டா துறைமுகத்தில் அவங்க படையை வைத்து இந்தியாவை தாக்கும்...'' என பேசிக்கொண்டிருந்த போதே அங்கு வந்த போலீசார் அகோரியை அகற்ற பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் அமித்ஷாவிடம் தான் வந்திருப்பதாக சொல்லுங்க. இந்த வீடியோவ அமித்ஷாவிடம் போட்டுக்காட்டுங்க'' என ஆவேசமானார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.