
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக கனமழை பொழிந்து வருகிறது. அந்த வகையில், இன்று (19-05-25) காலை முதல் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களில் நாளை (20-05-25) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, நாமக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (20-05-25) கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு நாளை மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மே 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளில் மேலும் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கர்நாடகா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் வரும் 21ஆம் தேதி வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகக் கூடும். இதன் காரணமாக அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இந்த தாழ்வு பகுதி, வடக்கு பகுதியில் நகர்ந்து மேலும் வலுவடையக் கூடும். சென்னையில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.