
ஊட்டியில் நடந்து வரும் துணை வேந்தர்கள் மாநாட்டில் மாநில பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில போலீஸார் மிரட்டியதால், அவர்கள் பங்கேற்கவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் உள்ள மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களின் துணைவேந்தர்களின் வருடாந்திர மாநாடு இன்றும், நாளையும் (ஏப்ரல் 25 மற்றும் ஏப்ரல் 26ஆம் தேதி) என இரு நாட்கள் நடைபெற்று வருகிறது. உதகமண்டலத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் தொடர்ந்து 4வது ஆண்டாக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு மாநாட்டைத் தொடங்கி வைத்தார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மாநாட்டுக்குத் தலைமையேற்றுள்ளார். இந்நிலையில், மாநாட்டில் மாநில பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பெரும்பாலானவர்கள் பங்கேற்கவில்லை.

இது குறித்துப் பேசிய ஆளுநர், ‘மாநாட்டில் மாநில பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பங்கேற்கவில்லை. சிலர் ஊட்டி வந்தடைந்தனர். ஆனால் அவர்கள் மிரட்டப்பட்டனர். மாநில அரசின் போலீஸார் அவர்கள் தங்கியிருந்த பகுதிகளுக்கு சென்று கதவை தட்டி, நீங்கள் வீடு திரும்ப முடியாது என மிரட்டியுள்ளனர்” என்று குற்றம்சாட்டியிருந்தார். மேலும், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் எதுவும் தெரிவதில்லை. ஆண்டுக்கு 6500 பேர் முனைவர் பட்டம் பெறுகின்றனர். இவர்கள் ரூ. 15000 சம்பளத்துக்கு தினக்கூலிகளாக பணிபுரிகின்றனர். இவர்கள் அரசுத் துறைகளில் ஏதாவது பணியில் சேருவதே இலக்காக இருக்கிறது. ஆனால் தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர். இந்தியாவிலேயே சிறந்து விளங்கிய தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் நிலை தற்போது கவலைக்குரியதாக உள்ளது. பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் ஊழியர்களுகக்உ ஊதியம் வழங்க முடியாத நிலையுள்ளது’ என்றார்.
இந்த மாநாட்டிற்கு அழகப்பா , அண்ணா, அண்ணாமலை, பாரதியார், பாரதிதாசன், மதுரை காமராஜர், மனோன்மணி சுந்தரனார் பல்கலைக்கழகம், அன்னை தெரேசா, டாக்டர் எம்ஜிஆர் மருத்துவர் பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்த வெளி பல்கலைக்கழகம், தமிழ்நாடு உடற்கல்விகள் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம், தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் என 21 அரசு பல்கலைக்கழகங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கிருஷ்ணன், திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகம் துணைவேந்தர் பஞ்சநாதன், அவிநாசிலிங்கம் பெண்கள் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாரதி அரிசங்கர், ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரஜத் குப்தா, எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முத்தமிழ்செல்வன், சிவ்நாடார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பட்டாச்சாரியார், அமித் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராஜேந்திரன், விநாயகா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதிர், நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சஜின் நற்குணம் ஆகிய 9 துணை வேந்தர்கள் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.