Skip to main content

சென்னையில் திடீரென மாநகரப் பேருந்துகள் நிறுத்தம்; பொதுமக்கள் அவதி

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

 Government buses stop suddenly in Chennai; Public suffering

 

சென்னையில் சில இடங்களில் அரசு பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டு போக்குவரத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள், பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

 

தனியார்மய நடவடிக்கையை கண்டித்து சென்னையில் அரசு பேருந்துகளை திடீரென நிறுத்தி போக்குவரத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியார் மூலம் ஓட்டுநர்கள் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கத்தினர் இந்த திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

 

சைதாப்பேட்டை, கே.கே.நகர், வடபழனி, ஆலந்தூர் உள்ளிட்ட பணிமனைகளைச் சேர்ந்த பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். தாம்பரம் பணிமனையிலிருந்து மாநகரப் பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதேபோல் பூந்தமல்லி, ஆவடி அரசு பேருந்து பணிமனைகளில் இருந்து பேருந்துகள் வெளியே வராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

 

தொடர்ந்து, தமிழக முதல்வர் தமிழ்நாடு திரும்பியதும் உரிய பேச்சுவார்த்தை நடத்திய பின் சிக்கல்கள் களையப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் போராட்ட அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உடலுக்கு முதல்வர் அஞ்சலி! 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
CM Tributes to Late Former Minister Indira Kumari

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்து வந்தவர் இந்திரகுமாரி (வயது 73). அப்போது தொட்டில் குழந்தை திட்டம் உருவாக இவர் முக்கிய காரணமாக விளங்கினார். இவருக்கு வழக்கறிஞர் பாபு என்ற கணவரும், லேகா சந்திரசேகர் என்ற மகளும் உள்ளனர். அதிமுகவில் இருந்த இந்திராகுமாரி அதன் பின்பு, கடந்த 2006 ஆம் ஆண்டில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

திமுகவில் இவருக்கு இலக்கிய அணி மாநிலத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. இத்தகைய சூழலில் இந்திரகுமாரி, சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நேற்று (15.04.2024) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து இந்திரகுமாரியின் உடல் அஞ்சலிக்காக அடையாற்றில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திமுக நிர்வாகிகள் பலரும் வந்து அவருக்கு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதே சமயம் இந்திரகுமாரி மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “திமுக இலக்கிய அணித் தலைவர் புலவர் இந்திரகுமாரி மறைந்த துயரச் செய்தி வந்து சோகத்தில் ஆழ்த்தியது. நெடிய அரசியல் அனுபவம் கொண்டவரான புலவர் இந்திரகுமாரி தமிழக அமைச்சரவையில் இடம்பெற்று மக்களுக்குப் பணியாற்றியவர். தீராத் தமிழ்ப் பற்றுடன் இலக்கிய வெளியில் இயங்கியவர். அவரது மறைவு திமுகவிற்கும், இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும். புலவர் இந்திரகுமாரியை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். 

CM Tributes to Late Former Minister Indira Kumari

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மறைந்த இந்திரகுமாரியின் இல்லத்திற்கு இன்று (16.4.2024) நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Kolathur MK Stalin propaganda

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இதனையொட்டி திருவள்ளூர் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மற்றும் வடசென்னை மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து நேற்று (15.04.2024) தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வடசென்னையில் வாக்கு சேகரித்தார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியுடன் சென்னை கொளத்தூரில் இன்று (16.04.2024) காலை வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்தார். அப்போது பொதுமக்களை சந்தித்து வடசென்னை கலாநிதி வீராசாமியை ஆதரித்து வாக்கு சேகரித்தார். மேலும் பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். அப்போது அவருடன் பொதுமக்கள் ஆர்வத்துடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து திறந்த வாகனத்தில் சென்று ஆதரவு திரட்டினார். சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக நிர்வாகிகள் எனப் பலரும் உடன் இருந்தனர். மேலும் இன்று மாலை நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார். நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வது குறிப்பிடத்தக்கது.