
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் கடந்த 5 ந் தேதி இரவு கடைவீதியில் இரு தரப்பு இளைஞர்கள் மத்தியில் பிரச்சனை ஏற்பட்டது. இதில், ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினர் குடியிருப்பிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதால் இரு தரப்பிற்கும் இடையே மோதலாக வெடித்து போலீசார் முன்னிலையிலேயே இரு தரப்பிலும் பலர் தாக்கப்பட்டு காயமடைந்தனர். இதில் ஒரு ஆள் இல்லாத வீடு, பைக்குகள் எரிக்கப்பட்டது. மேலும் பைக்குகள், வீடுகள் சேதமாக்கப்பட்டது. அதன் பிறகு மோதல் கட்டுக்குள் வந்தது. இதில் காயமடைந்தவர்கள் புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த மோதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று இரு தரப்பில் இருந்தும் போலீசாரிடம் புகார் மனுக்கள் கொடுடுத்திருந்தனர். இந்த நிலையில், இந்த மோதலில் ஈடுபட்டு வெளியூர்களில் தலைமறைவாக இருந்த ஒரு தரப்பைச் சேர்ந்த வி.சி.க பிரமுகர் சேதுபதியை கைது செய்த போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதே போல மற்றொரு தரப்பைச் சேர்ந்த வீரபாண்டியனை பிடித்த போலீசார், வன்கொடுமை வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த மோதல் சம்பவத்தில் தற்போது வரை ஒரு தரப்பில் 21 பேரும் மற்றொரு தரப்பில் 7 பேர் என இரு தரப்பிலும் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் கைது தொடரும் என கூறப்படுகிறது.