Skip to main content

வடகாடு சம்பவம்; திருமாவளவன் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!

Published on 10/05/2025 | Edited on 10/05/2025

 

 Complaint filed against Thirumavalavan at the police station at Vadakadu incident

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் கடந்த 5 ந் தேதி இரவு கடைவீதியில் இரு தரப்பு இளைஞர்கள் மத்தியில் பிரச்சனை ஏற்பட்டது. இதில், ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினர் குடியிருப்பிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதால் இரு தரப்பிற்கும் இடையே மோதலாக வெடித்து போலீசார் முன்னிலையிலேயே இரு தரப்பிலும் பலர் தாக்கப்பட்டு காயமடைந்தனர். இதில் ஒரு ஆள் இல்லாத வீடு, பைக்குகள் எரிக்கப்பட்டது. மேலும் பைக்குகள், வீடுகள் சேதமாக்கப்பட்டது. அதன் பிறகு மோதல் கட்டுக்குள் வந்தது. இதில் காயமடைந்தவர்கள் புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த சம்பவம் நடந்த அடுத்த நாள், சிதம்பரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல். திருமாவளவன் சிதம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “வடகாடு கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத் திருவிழாவில் ஆதிதிராவிடர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தேர் வடம் தொட்டு கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டு தேரோட்டத்தில் வழக்கம் போல வடம் தொட்டு கொடுக்கச் சென்ற போது அவர்களை தாக்கி குடியிருப்பிற்குள்ளும் நுழைந்து வீடுகளை தீயிட்டு கொளுத்தி பலரை தாக்கி காயப்படுத்தி பொருட்களை சேதப்படுத்தி உள்ளதாக” கூறியிருந்தார். 

இந்த சம்பவத்தில் திருமாவளவன் உண்மைக்கு புறம்பான பேட் கொடுத்து இரு பிரிவினரிடையே மேலும் பிரச்சனையை தூண்டிவிடுவதாக கூறி வழக்கமாக தேர் வடம் தொட்டுக் கொடுக்கும் சேர்வைகாரன்பட்டிகாரர்கள் இன்று வடகாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘வடகாடு முத்துமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் கடந்த 300 வருடமாக தேரோட்டத்தில் சேர்வைகாரன்பட்டி சேர்வை வகையறாக்களை சேர்ந்தவர்களே தேர் வடம் தொட்டுக் கொடுத்து வருகிறோம். அதே போல தான் இந்த ஆண்டும் தேரோட்டத்தில் நடந்தது. ஆனால் வி.சி.க தலைவர் திருமாவளவன், தான் ஒரு மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு உண்மைக்கு புறம்பான தகவல்களை ஊடகங்களில் பேட்டியாகவும் சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளார். இதனால் எங்கள் பாரம்பரிய உரிமையை கலங்கம் ஏற்படுத்துவதாகவும் உண்மைக்கு புறம்பான தகவலால் இரு தரப்பு மோதலை தூண்டிவிடுவது போலவும் உள்ளது. ஆகவே தவறான தகவலை பரப்பி அவதூறு செய்துள்ள திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த புகாரில் கூறியுள்ளனர்.

புகார் மனுவை பெற்றுக் கொண்ட வடகாடு போலீசார், உயர் அதிகாரிகளிடம் கேட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். திருமாளவன் மீது புகார் கொடுத்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்