Skip to main content

என்.எல்.சி பேச்சுவார்த்தை தோல்வி

Published on 01/10/2019 | Edited on 01/10/2019

நிரந்தர ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டு என்ற கோரிக்கையை வலியுறுத்தி என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தையில் என்எல்சி சார்பில் யாரும் பங்கேற்காததால் பேச்சு வாரத்தை தோல்வி முடிந்தது.

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள், இன்கோசெர்வ் தொழிலாளர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.  இவர்கள் பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம், மருத்துவ வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக பல்வேறு போரட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனிடையே சமீபத்தில் ஒரே வேலையை செய்யக்கூடிய  நிரந்தர தொழிலாளர்களுக்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் சமமான  ஊதியத்தை வழங்க வேண்டும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

 

 NLC talks fail

 

அதையடுத்து என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் மத்திய அரசின் அறிவிப்பின்படி நிரந்தர ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி என்.எல்.சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் கடந்த 09-ஆம் தேதி  வேலை நிறுத்த அறிவிக்கை  கொடுக்கப்பட்டது. அதனையடுத்து சமரசத்திற்கான முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி  நேற்று புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள மத்திய உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் உதவி தொழிலாளர் ஆணையர் கணேசன் தலைமை  தாங்கினார். ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் தலைவர் அந்தோணி செல்வராஜ், பொதுச்செயலாளர் செல்வமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் என்எல்சி நிர்வாகம் தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை.

உதவி தொழிலாளர் ஆணையரிடம் ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மனு கொடுத்தபின்பு , மத்திய அரசு உத்தரவை என்.எல்.சி. நிர்வாகம் செயல்படுத்த வேண்டும். அதற்குரிய முறையில் தொழிலாளர் உதவி ஆணையர் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.  மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த கட்டமாக வருகிற 16-ஆம் தேதி சென்னை தலைமை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாகவும் ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் எம்.சேகர் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்