Skip to main content

முப்படைகளின் தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Published on 11/05/2025 | Edited on 11/05/2025

 

PM Modi holds consultations with the Chiefs of the Tri Services

ஜம்மு - காஷ்மீரில் நிகழ்ந்த பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க இந்தியா சார்பில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்து வந்தது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம்  நடத்தி வந்த தாக்குதல் முயற்சிகளையும், இந்தியா முறியடித்தது.

அதே சமயம் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்தது. இதனையடுத்து இந்த தாக்குதல்களை நிறுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நேற்று (10.05.2025) மாலை 05.00 மணியளவில் இருநாட்டு ராணுவ தளபதி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தாக்குதல் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதே போல், பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இருப்பினும் நேற்று இரவு 10.30 மணியளவில் எல்லை தாண்டி இந்தியா மீது 11 இடங்களில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு இந்தியா சார்பில் எதிர்த்தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக எல்லைக்கோட்டுப் பகுதியில் சற்று பதற்றமான சூழல் நிலவியது. இத்தகைய சூழலில் தான் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைதி திரும்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருக்கிறது. அதன்படி ஜம்மு நகரச் சாலைகள் அமைதியாகக் காட்சி அளிக்கின்றன.

இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் முப்படை தளபதிகளோடு இன்று (11.05.2025) முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். கடந்த 48 மணி நேரத்தில் பிரதமர் மோடி முப்படை தளபதிகளோடு மேற்கொண்ட 3வது ஆலோசனைக் கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தின் போது இன்று இரவும் பாகிஸ்தானினுடைய ட்ரோன்கள் இந்திய வான்வெளிக்குள் வந்தால் அவர்களுக்குத் தக்க பதிலடி கொடுப்பதற்கான முக்கிய ஆலோசனைகளைப் பிரதமர் மோடி வழங்கியதாகக் கூறப்படுகிறது. எனவே முப்படையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

PM Modi holds consultations with the Chiefs of the Tri Services
கோப்புப்படம்

இந்தியா - பாகிஸ்தான் எல்லையோர பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை அதிகரிக்க வேண்டும். பாகிஸ்தானிடம் இருந்து வரும் தாக்குதல்களுக்குத் தக்க பதிலடி கொடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் முப்படைகளின் தலைமை தளபதியான அனில் சவகான், ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திரா திவேதி, கடற்படை அட்மிரல் தினேஷ் திரிபாதி மற்றும் விமானப்படை தளபதி ஏ.பி.சிங் ஆகியோர் கலந்துகொண்டனர். 

சார்ந்த செய்திகள்