
இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால், ஓராண்டுக்குள் நகைக்கடனைத் திருப்பி செலுத்தாதவர்கள் தன் நகையை பறிகொடுக்க வேண்டிய நிலை வந்திருக்கிறது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.குணசேகரன், பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ரிசர்வ் வங்கி என்பது இந்திய நாட்டின் கடை கோடியில் உள்ள ஏழை: நடுத்தர மக்களின் வாழ்க்கையை பற்றி கவலைப்படாத அமைப்பு என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது. அதாவது இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் அமுல் படுத்திய புதிய கொள்கை முடிவால்.....விவசாயிகள்.. ஏழை..நடுத்தர மக்களுக்கு அவசர தேவைக்கு எளிதாக கிடைத்து வந்த... நகை ஈட்டு கடன் தற்போது தடை விதிக்கும் நிலைக்கு வந்திருக்கிறது. இதன் புதிய அறிவிப்பின்படி..... நகை அடமானம் வைத்து பெறப்பட்ட கடன் தொகையை வட்டியுடன் ஓராண்டு முடிவில் முழுதொகையையும் திருப்பி செலுத்திடவேண்டும். இந்த நகையை மறு அடமானம் வைத்து கடனை புதுப்பிக்க முடியாது. ஏனெனில் வாங்கிய கடனுக்கான காலக்கெடு முடிந்தால்.. ஒரு நாள் கழித்து தான் இக்கடனை புதுப்பிக்க முடியும் என்ற அறிவிப்பு வந்துள்ளது... அதாவது ஓராண்டுக்குள் கடன் தொகையை வட்டியுடன் முழுமையாக செலுத்தியாக வேண்டும் என்று நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்தக் காலக்கெடுவுக்குள் அடகு வைத்த நகையை மீட்க முடியாது போனால் அடுத்த நாளே அந்த நகையை ஏலம் விடுவதற்கான ஏற்பாட்டை வங்கிகள் தொடங்கிவிடும் என்பது வழக்கம்.
இதுவரை பெற்ற நகை கடனை செலுத்த இயலாதவர்கள்.... அதே நகை கடனை புதுப்பித்து மறுகடன் பெற்று வந்தார்கள். புதிய அறிவிப்பின்படி இனி பெற முடியாது. விவசாயிகள்.. சிறு வியாபாரிகள்...நடுத்தர மற்றும் சாமானிய மக்களுக்கு நகைக்கடன் மட்டுமே அவசர தேவைக்கு உதவியாக அமைகிறது. இப்பொழுது இது தடை செய்யப்படுகிறது. ஒரு காலத்தில் வங்கிகள் அனைத்தும் தனியார்களிடம் இருந்த நிலையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டங்களில் 1969 ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி 14 வங்கிகளை அரசுடமையாக்கினார். அதன் பின்தான் இந்த வங்கிகளின் சேவைகள் சாமானிய மக்களுக்கும் விவசாயிகளுக்கும் கிடைக்க தொடங்கின. இன்றைக்கு பெரும்பகுதியாக வங்கிகளில் கணக்குத் தொடங்கி பரிமாற்றம் செய்பவர்கள் சாதாரண நடுத்தர மக்கள் ஆவர். சிறு வணிகம் சிறுகுறு விவசாயிகளுக்கு இவ்வங்கிகள் கடன் அளிப்பதன் மூலம் கிராமப்புற பொருளாதார மேம்பாட்டுக்கு ஓரளவு உதவியாக உள்ளது.
இந்த நிலையில் தற்போதைய ஒன்றிய அரசு இதே ரிசர்வ் வங்கியை பயன்படுத்தி நுண் நிதி கடன் (மைக்ரோ பைனான்ஸ்) என்று தனியார் நிதி நிறுவனங்களுக்கு கடன் கொடுத்து கிராமப்புற மக்களின் மேம்பாட்டுக்கு உதவும் திட்டம் என அறிவித்தது. ஒரே கிராமத்திலேயே எண்ணற்ற நிறுவனங்கள் கடன்களை கொடுக்கின்றன. கடனை திருப்பி செலுத்த இயலாத பல குடும்பங்கள் வெளிப்படுத்த முடியாத பல துயரங்களை அனுபவித்து வருகின்றனர். மிகக்குறைந்த வட்டிக்கு கடன்பெற்ற நிறுவனங்கள் கூடுதல் வட்டியை வசூலித்து இந்த தனியார் நிறுவனங்கள் பெரு லாபம் பெற வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இதுவரை ஏ.டி.எம். மூலம் ஒவ்வொரு முறையும் பணம் எடுக்க வவுச்சர் பெற ரூ.21கட்டணமாக அவரவர் வங்கிக்கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது. தற்பொழுது இது ரூபாய் 23 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது
இந்த நிலையில் தான் ரிசர்வ் வங்கி நகை கடன் சலுகையை நீக்கி இருக்கிறது. ஓராண்டுக்குள் நகைக்கடனைத் திருப்பி செலுத்தாதவர்கள் தன் நகையை பறிகொடுக்க வேண்டிய நிலை வந்திருக்கிறது. எனவே இதை மறு ஆய்வு செய்து முந்தைய நடைமுறையையே கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.