"மேட்டூர் அணை நிரம்பி விட்டது, பவானிசாகர் அணை நிரம்பி விட்டது. இந்த அணைகளுக்கு வருகிற உபரி நீர் அப்படியே பவானி ஆற்றிலும் காவேரி ஆற்றிலும் திறக்கப்பட்டு காவேரி நீர் அகன்டகாவிரியாய் இரு கரைகளையும் தொட்டு ஒடுகிறது. ஆனால் காவேரி கரையிலிருந்து 25 கிலோ மீட்டரில் குடியிருக்கின்ற எங்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை. ஒரு நாளா, இரண்டு நாளா? இருபது நாளுக்கு ஒரு முறை மட்டுமே வருகிறது. அதுவும் நான்கு குடம் தண்ணீர் மட்டுமே விடுகின்றனர். ஆற்றில் தண்ணீர் அளவில்லாமல் போகும்போது எங்களது குடிநீர் தேவையை கூட இந்த அரசு நிர்வாகம் சரி செய்ய முடியவில்லையா?" என பரிதாபத்துடன் கேட்கிறார்கள் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் வாழும் பொது மக்கள்.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் டி.ஆர்.ஓ கவிதா தலைமையில் நடந்தது. அப்போது சென்னிமலை ஒட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் திரண்டு வந்து மனு ஒன்றை கொடுத்தனர். பிறகு அவர்கள் கூறும்போது, "நாங்கள் சென்னிமலை ஒன்றியம் ஒட்டபாறை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாரதி நகர் பகுதியில் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகிறோம். காவிரி நீர் தான் எங்களுக்கு குடி நீர் ஆதாரமாக உள்ளது. எங்கள் பகுதியில் தண்ணீர் வசதிக்காக 2 போர்வெல்கள் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த இரண்டு போர்வெல்கள் வறண்டு போய்விட்டது.
மேலும், எங்கள் பகுதியில் தற்போது முறையாக குடிநீர் வினியோகம் செய்வதில்லை. 20 நாளுக்கு ஒரு முறை தான் குடிநீர் வருகிறது. அதுவும் நான்கு குடம் தான் கிடைக்கிறது. வேறு வழி இல்லாமல் குடிநீரை விலை கொடுத்துதான் வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே எங்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்."