Skip to main content

என் நெஞ்சில் கை வைத்தார் டி.எஸ்.பி..! புகார் கூறி மருத்துவமனையில் அட்மிட் ஆன பெண் எஸ்.ஐ..!!!

Published on 24/10/2018 | Edited on 24/10/2018

 " பெண் என்றும் பாராமல், வேண்டுமென்றே என் நெஞ்சின் மீது கையை வைத்துத் தள்ளினார் அந்த டி.எஸ்.பி.. அவர் டி.ஜி.பி.அலுவலகத்தில் பணியாற்றும் மேலதிகாரி என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறது காவல்துறை." எனப் புகார் கூறியதோடு மட்டுமில்லாமல், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அட்மிட்டாகி சிகிச்சைப் பெற்று வருகிறார் திருச்செந்தூர் காவல் நிலைய பெண் எஸ்.ஐ. ஒருவர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாகப் பணியாற்றி வருபவர் சத்யபாமா. 2011ம் பேட்ஜ் அதிகாரியான இவர் அருகிலுள்ள குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோவில் தசராத் திருவிழாவில் 17/10/2018ம் தேதி முதல் கோவிலின் மூலஸ்தானப் பகுதிக்கான பாதுகாப்புப் பணியினை கவனித்து வந்தார். இந்நிலையில், கடந்த 20/10/2018 அன்று இரவு 11.30 மணியளவில், சென்னை டி.ஜி.பி.அலுவலகத்தில் டி.எஸ்.பி.யாக பணிபுரியும் முத்துக்குமார் தன்னுடைய குடும்பத்தினருடன், உள்ளூர் தனிப்பிரிவு ஏட்டையா வெலிங்டன் துணையுடன், பக்தர்கள் வெளியேறும் வரிசை வழியாக மூலஸ்தானம் சென்று சாமி தரிசனம் செல்ல முயற்சிக்க, அங்குப் பாதுகாப்பு பணியிலிருந்த பெண் எஸ்.ஐ.சத்யபாமா தடுத்து விசாரித்து விட்டு அனுப்பியிருக்கின்றார். அதன் பிறகு சுவாமி தரிசனம் முடித்து வெளியேறிய டி.எஸ்.பி.முத்துக்குமார், " என்னை தடுக்கிற அளவிற்கு நீ பெரிய ஆளா..?" என ஆரம்பித்து எஸ்.ஐ.க்கும், டி.எஸ்.பி.மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், கைகலப்பும் ஏற்பட்டது. தேவஸ்தான ஊழியர்களும், பொதுமக்களுமாக சேர்ந்து இவர்கள் இருவரையும் சமாதானம் செய்து, டி.எஸ்.பி.யை அனுப்பி வைத்திருக்கின்றனர்.

இச்சம்பவம் நடந்து முடிந்த அதே தினத்தில், குலசேகரப்பட்டிண காவல் நிலையத்தில் டி.எஸ்.பி.யான முத்துக்குமார் அளித்துள்ள  புகாரில் " அன்றையப் பொழுதில் வரிசையில் வந்த பக்தர்களை சராமரியாக திட்டிக் கொண்டே இருந்ததால், அவரிடம் நான் இன்னார்.! என அறிமுகம் செய்து கொண்டு பேச்சுக் கொடுத்தால் அமைதியாவார் என்ற நம்பிக்கையில் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவர் எங்கு வேலைப் பார்க்கிறார் என்பதை கேட்டேன். அவரோ, " உனக்கு ஏன்டா சொல்லனும்..?" என சகட்டுமேனிக்கு திட்டினார். சுவாமிக் கும்பிட்டு வரும் போதும் என்னை திட்ட, எனது குடும்பத்தாருக்கும் அவருக்கும் வாக்குவாதம் உண்டானது. அப்பொழுது கூட்டமும் அதிகமாக இருந்ததால் என் கையிலிருந்த விபூதி அவர் மீது கொட்டி விட்டது. அவ்வளவு தான்.!! கோபமடைந்து பைத்தியம் போல் கத்தத் தொடங்கினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்"  எனக்கூறியுள்ளார்.

ஆனால், " அவர் எதிர்ப் பாதையில் வந்ததால் தான் இந்த பிரச்சனையே நடந்தது. சுவாமி தரிசனம் முடித்து வந்த வேகத்திலேயே என் நெஞ்சின் மீது கை வைத்து எட்டித் தள்ளினார். அப்படியே நிலைகுலைந்து உண்டியல் மீது விழுந்தேன். அத்தோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார் அந்த டி.எஸ்.பி.. இதற்கு சாட்சி என்னுடைன் பணியில் இருந்த பியுலா செல்வக்குமாரி, முத்துமாலை உள்ளிட்ட பெண்காவலர்களும், கோவில் பணியாளர்களும். இது அப்படியே அங்குள்ள சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது. ஆகவே, இப்பிரச்சனைக்கு காரணமான டி.எஸ்.பி. முத்துக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பாதிப்புக்குள்ளான பெண் எஸ்.ஐ.சத்தியபாமாவும் புகார் கொடுத்துவிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார். இரு தரப்பையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே சக காவலர்களின் கோரிக்கை. ஆவண செய்வாரா எஸ்.பி..?

 

 

சார்ந்த செய்திகள்