
தமிழ்நாட்டில் ஒரு பக்கம் ஜல்லிக்கட்டுகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் மற்றொரு பக்கம் கோயில் திருவிழாக்கள், தலைவர்களின் பிறந்தநாள்களின் போது மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயங்களும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த பந்தயங்களுக்காக காளைகள், குதிரைகளை வளர்க்கும் ஆர்வலர்கள் தினசரி பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். வருடத்தில் சில நாட்கள் மட்டுமே இந்தப் பந்தயங்கள் நடந்தாலும், வருடம் முழுவதும் தயார்படுத்தும் பணிகளில் தொய்விருக்காது. அதே போல வண்டிப் பந்தயங்களை காண ஆண்கள், பெண்கள் என கிமீ கணக்கில் நின்று பார்த்து ரசிக்கின்றனர்.
வண்டிப்பந்தம் நடப்பதாக அறிவிப்பு வெளியானதும் சாரதிகள் தங்களையும் தயார்படுத்திக் கொள்கின்றனர். ஆர்வலர்கள் உற்சாகமாகின்றனர். பந்தயம் தொடங்கும் போது சுமார் 15 வண்டிகள் போட்டிகளில் பங்கேற்கும் நிலையில் அந்த வண்டிகளுக்கு முன்பும், பின்பும், இரு பக்கங்கள் என 4 பக்கமும் பைக்களில் இளைஞர்கள் வளையம் போட்டுச் செல்வதால் காளைகள், குதிரைகளால் சுதந்திரமாக ஓட முடியவில்லை. மேலும், பக்கத்தில் வரும் வாகனங்களில் வண்டி மோதிவிடுமோ என்ற அச்சத்தோடு சாரதிகளும் வண்டிகளை ஓட்டுவதால் வெற்றி இலக்கை எட்டுவதில் சிக்கல் ஏற்படுகிறது.
வண்டிப் பந்தயங்கள் பிரதானச் சாலைகளில் நடப்பதால் வண்டிகளை சுற்றி இளைஞர்கள் பைக்களில் கூச்சலுடன் செல்லும் போது ஓடிக்கொண்டிருக்கும் கால்நடைகள் வெறித்து வெளியே இழுத்துச் சென்று விபத்துகளையும் ஏற்படுத்துகிறது. அதே போல எதிரே வரும் வாகனங்களில் மோதவும் வாய்ப்புள்ளது. இது போன்ற விபத்துகளை தவிர்க்க பந்தயங்களில் ஓடும் வண்டிகளை சுற்றி பைக்களில் வளையம் போட்டுச் செல்வதை தவிர்த்தால் நன்றாக இருக்கும் என்கின்றனர் வண்டிப் பந்தய ரசிகர்களும், சமூக ஆர்வலர்களும்.