Skip to main content

வேலை இல்லாத இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம்... மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...

Published on 21/10/2019 | Edited on 21/10/2019

தங்களது படிப்பை முடித்துவிட்டு பணியில் சேர முடியாமல் இருக்கும் வேலையில்லாத இளைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை பெற கடலூர் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

 

cuddalore collector announcement

 

 

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 1-10-2019 அன்று தொடங்க உள்ள காலாண்டுக்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடம் இருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

10-ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வி தகுதிகளுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவை தொடர்ந்து புதுப்பித்து, கடந்த 30-ந் தேதி வரை 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். உதவித்தொகையை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் கடந்த 30-ந் தேதியுடன் 45 வயதுக்குள்ளும், இதர இனத்தினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

உதவித்தொகை விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை இலவசமா பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை மனுதாரர்கள் வருகிற 30-ந் தேதிக்குள் அனைத்து வேலை நாட்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப்பிரிவில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப் புத்தகத்துடன் நேரில் கொடுக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்