Skip to main content

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனை அரிவாள்மனையால் கழுத்தறுத்து கொன்ற மனைவி - சடலத்தை சாக்குப்பையில் கட்டி கிணற்றில் வீசிய கொடூரம்

Published on 19/03/2022 | Edited on 19/03/2022

 

salem

 

சேலத்தில், திருமண உறவுக்கு மீறிய தவறான தொடர்பைக் கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த மனைவி, ஆண் நண்பருடன் சேர்ந்து அரிவாள்மனையால் கணவனைக் கழுத்துறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் அழகாபுரம் படையப்பா நகரில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் இருந்து வியாழக்கிழமை (மார்ச் 17) காலையில் துர்நாற்றம் வீசியது. சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு சாக்குமூட்டை மிதந்து கொண்டிருந்தது. அப்பகுதி மக்கள் இதுபற்றி அழகாபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

 

நிகழ்விடம் விரைந்த காவல்துறையினர், பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் கிணற்றில் மிதந்த சாக்கு மூட்டையை மேலே கொண்டு வந்தனர். அதைப் பிரித்து பார்த்தபோது, கை, கால்கள் கட்டப்பட்டு, அழுகிய நிலையில் ஓர் ஆணின் சடலம் கிடப்பது தெரிய வந்தது. சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முகம் அழுகிய நிலையில் இருந்ததால் கொலையுண்ட நபர் யார் என்று உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்த விசாரணை நடந்து வந்த நிலையில், அழகாபுரத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவரும், குமரன் என்பவரும் மார்ச் 17ம் தேதியன்று, அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) புஷ்பாவிடம் சரண் அடைந்தனர்.

 

திடுதிப்பென்று இருவர் சரணடைய வந்திருப்பதாகச் சொன்னதால், விஏஓ சிறிது நேரம் குழம்பிப் போனார். அவர்களிடம் விசாரித்ததில், இருவரும் சேர்ந்து வெங்கடேசன் என்பவரை கொலை செய்து, சாக்குப்பையில் போட்டு கட்டி கிணற்றில் வீசியதாகவும், தற்போது கிணற்றில் இருந்து கைப்பற்றப்பட்டது வெங்கடேசனின் சடலம்தான் என்றும் கூறியுள்ளனர். சரணடைந்த விஜயலட்சுமியின் கணவர்தான் கொலையுண்ட நபர் என்பதும் தெரிய வந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த விஏஓ, இதுகுறித்து அழகாபுரம் காவல்நிலைய காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

 

காவல்துறையினர் விரைந்து வந்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர். இருவரிடமும் விசாரணை நடத்தியதில் சினிமாவை மிஞ்சும் வகையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது: சேலம் அழகாபுரம் மிட்டாபுதூர் ராஜராஜன் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (40). ரிக் லாரி ஓட்டுநர். இவருடைய மனைவி விஜயலட்சுமி(33). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். விஜயலட்சுமியின் தங்கை சாந்தி. அவருடைய கணவர் குமரன் (32). இவர்கள் இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கின்றனர். குமரன், வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அழகாபுரம் மிட்டாபுதூரில் வசிக்கிறார்.

 

salem

 

கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு வெங்கடேசன் கோவையில் உள்ள ஒரு ஏஜன்சி மூலமாக தென்னாப்பிரிக்கா நாட்டில் உள்ள ஒரு ரிக் லாரி நிறுவனத்தில் வேலைக்குச் சென்று விட்டார். தன் மனைவியின் தங்கை கணவர் என்ற அடிப்படையில் குமரனுக்கும் வெங்கடேசனுக்கும் நெருக்கமான நட்பு இருந்தது. அதனால் அவர் வெளிநாட்டிற்குக் கிளம்பிச் சென்றபோது, தான் திரும்பி வரும் வரை தனியாக இருக்கும் தன் குழந்தைகளையும், மனைவியையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியதுடன், தனது ஏடிஎம் கார்டை கொடுத்து, மனைவிக்கு தேவையான போது தன் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுக்கும்படியும் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

 

அதன்படி குமரனும் அடிக்கடி விஜயலட்சுமிக்கு வீட்டுக்குச் சென்று அவருக்கும், குழந்தைகளுக்கும் தேவையான உதவிகளைச் செய்து வந்துள்ளார். இவ்வாறு அடிக்கடி சென்று வந்ததில் குமரனுக்கும், விஜயலட்சுமிக்கும் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. வீட்டில் தனிமையில் இருவரும் அடிக்கடி உடல் ரீதியாகவும் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் எப்படியோ தென்னாப்பிரிக்காவில் இருந்த வெங்கடேசனுக்கு  தெரிய வந்தது. தாலி கட்டிய மனைவியும், உண்மையாக பழகிய நண்பனும் தனக்குத் துரோகம் செய்து விட்டதாக எண்ணினார் வெங்கடேசன். இந்த நிலையில், மார்ச் 10ஆம் தேதி அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து கோவை திரும்பினார். அங்கிருந்து குமரனை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட வெங்கடேசன், தான் ஊர் திரும்பியதை தன் மனைவிக்குச் சொல்லாமல் சஸ்பென்சாக வைத்திருக்கும்படி கூறியுள்ளார். மேலும், தன்னை வந்து அழைத்துச் செல்லும்படியும் கூறியிருக்கிறார்.

 

இதையடுத்து வெங்கடேசனை கார் மூலம் அழைத்து வந்த குமரன், சேலம் வரும் வழியில் ஓரிடத்தில் இருவரும் ஒன்றாக அமர்ந்து மதுபானம்  குடித்துள்ளனர். அன்று இரவு வீட்டுக்கு வந்த பிறகும்கூட இருவரும் மது குடித்துள்ளனர். அப்போது வெங்கடேசன், தான் ஊரில் இல்லாத நேரத்தில் தனக்கு இருவரும் சேர்ந்து துரோகம் செய்து விட்டதாகக் கூறியுள்ளார். உடனடியாக தவறான தொடர்பை கைவிடும்படி தன் மனைவியையும் குமரனையும் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன், இரும்புக்கம்பியால் மனைவியைத் தாக்கியுள்ளார். அதைத் தடுக்கச் சென்ற குமரனையும் தாக்கியுள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த வெங்கடேசனை, இனியும் அவர் உயிருடன் இருந்தால் நாம் சந்தோஷமாக வாழ முடியாது என்று கூறி, அவரைக் கொன்றுவிட தீர்மானித்துள்ளனர்.

 

வெங்கடசனிடம் இருந்த இரும்புக்கம்பியைப் பிடுங்கிய குமரன், அவரைச் சரமாரியாக தாக்கியுள்ளார். வீட்டில் இருந்த அரிவாள்மனையை விஜயலட்சுமி எடுத்துக் கொடுக்க, அதன்மூலம் வெங்கடேசனைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்திருக்கிறார் குமரன். இதில் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார் வெங்கடேசன். இதையடுத்து கொலையை மறைப்பது குறித்து இருவரும் யோசித்துள்ளனர். வெங்கடேசன் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய விவரம் வெளியில் யாருக்கும் தெரியாது என்பதால், சடலத்தை எங்காவது மறைத்துவிட்டால் கொலை நடந்ததே தெரியாமல் போய்விடும் என இருவரும் கணக்குப் போட்டனர்.

 

ஒரு நாள் முழுக்க தீவிரமாக யோசித்த அவர்கள் கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தனர். மறுநாள் (மார்ச் 11) இரவு, சடலமாகக் கிடந்த வெங்கடேசனின் கை, கால்களை கட்டினர். ஒரு சாக்குப்பையில் சடலத்தைப் போட்டு மூட்டையாக கட்டினர். இதையடுத்து ஒரு காரில் சடல மூட்டையை எடுத்துச்சென்ற அவர்கள், படையப்பா நகரில் உள்ள திலீப் என்பவருக்குச் சொந்தமான பாழடைந்த கிணற்றில் போட்டுவிட்டு அவரவர் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். சடலத்தைக் காவல்துறையினர் கைப்பற்றும் வரையிலும்கூட அவர்கள் எந்தவிதக் குற்ற உணர்வும் இல்லாமல் எப்போதும்போல் சகஜமாக இருந்துள்ளனர். சடலம் கைப்பற்றப்பட்டதால் எப்படியும் காவல்துறையினர் பிடித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் இருவரும் விஏஓ முன்பு சரணடைந்துள்ளனர். இவ்வாறு காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

 

திருமண உறவுக்கு மீறிய தவறான தொடர்பால் நிகழ்ந்த கொலை சம்பவம் அழகாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்