Skip to main content

“இது காலத்தின் கட்டாயம்..” சி.பி.எம். பாலகிருஷ்ணன் 

Published on 04/03/2021 | Edited on 04/03/2021

 

CPM Balakrishnan speech at kallakurichi

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சார விளக்க மற்றும் தேர்தல் நிதியளிப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஏழுமலை தலைமை தாங்க, நகர செயலாளர் தங்கராசு, ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார், சீனிவாசன், மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்கள், மாநிலக்குழு வெங்கட்ராமன் ஆனந்தன் ஆகியோர் துவக்க உரையாற்றினர். 

 

அதன்பிறகு மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது, “சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வன்னியர்களுக்கு இடஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றிய சில மணி நேரங்களில் அதிமுக, பாமக கூட்டணி உடன்பாடு நடந்துள்ளது. இந்த உள் இடஒதுக்கீடு என்பது வன்னியர்களுக்காக அல்ல; அதிமுக, பாமக என்ற இரண்டு கட்சிகளும் ஓட்டு வாங்குவதற்காக சேர்ந்து போட்ட நாடகம். 

 

தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்ற கட்சி இருக்காது. அப்படி அந்த அதிமுக கட்சி இருக்க வேண்டுமென்றால், பாஜக கூட்டணியைவிட்டு வெளியே வந்தால்தான் அது நடக்கும். வளர்ச்சித் திட்டத்தில் தமிழகம் முதலிடம் என்று விளம்பரம் செய்கிறார்கள். ஆனால், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவத் துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் பலவற்றில் ஊழல்தான் முதலிடத்தில் உள்ளது. பிரதமர் மோடியும் அமித்ஷாவும் சினிமாவில் நடிக்க வந்திருந்தால் உண்மையான திரைப்பட நடிகர்களான சிவாஜி, அமிதாப் பச்சனையே நடிப்பில் மிஞ்சியிருப்பார்கள். அந்த அளவிற்கு மக்களிடம் நடிக்கிறார்கள். 

 

‘தமிழ் சிறந்த மொழி. அதைப் படிக்கவில்லை’ என பிரதமர் மோடி வருத்தப்பட்டு பேசுகிறார். அவரது ஆட்சியில் அமைச்சர்கள் அனைவரும் இந்தியில்தானே கடிதம் எழுதுகின்றனர். ஏன் தமிழில் எழுத வேண்டியதுதானே. மோடி தமிழகத்திற்கு வந்தால் விவசாயிகளைப் பற்றி பெருமையாகப் பேசுகிறார். டெல்லியில் விவசாயிகள் 110 நாட்களாக போராடி வருகிறார்கள். அந்த விவசாயிகளில் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அந்த இடத்திற்குச் சென்று இந்த வசனத்தைப் பேச வேண்டியதுதானே. எனவே, வரும் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியை தமிழக மக்கள் தோற்கடிப்பார்கள். ஊழலில் முதல் இடத்தில் உள்ள தமிழகத்தை மீட்டெடுக்க ஆட்சி மாற்றம் அவசியம். இது காலத்தின் கட்டாயம் என்பதை மக்களும் உணர்ந்துள்ளார்கள்” இவ்வாறு அவர் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்