Skip to main content

“ஆளுநரை கண்டித்து தமிழக மக்கள் போராட வேண்டிய நிலை வரும்” - முத்தரசன் 

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

CPI Mutharasan addressed press in trichy

 

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க மாநிலத் தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பாஸ்கர், துணைத் தலைவர்கள் மாரிமுத்து எம்.எல்.ஏ., பத்மாவதி, வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு பேசினார்.

 

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், “நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாத காரணத்தினால் நாளுக்கு நாள் விலைவாசி உயருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக நடந்த ஆட்சியில் பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதியில் கூறியதை நிறைவேற்றவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக பல நிறுவனங்கள் மூடப்பட்டது. இதனால் பல லட்சம் பேர் வேலை இழந்தனர்.

 

மதக் கலவரம் மூலமாக மக்களை பிளவுபடுத்தி பா.ஜ.க.வினர் அரசியல் ஆதாயம் தேடுகின்றனர். தற்போது மொழியை கையில் எடுத்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி செல்லும் இடங்களில் எல்லாம் ஊழல், குடும்ப அரசியல் என்று பேசுகிறார். அவர் செய்த திட்டம் பற்றி பேச முடியவில்லை. மத்திய தணிக்கை குழு வெளியிட்ட தகவலின்படி மத்திய அரசு பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது. இதைக் கண்டித்து வருகிற செப்டம்பர் மாதம் 12-ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், 13-ந் தேதியும், 14-ந் தேதியும் நகர, ஒன்றியங்கள் அளவில் மறியல் போராட்டமும் நடத்தப்படும்.

 

தமிழக கவர்னர் ரவி, தமிழக அரசுக்கு எதிராகச் செயல்பட்டு அரசியல் செய்கிறார். டி.என்.பி.எஸ்.சி. தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமனத்துக்கான கோப்புகளை திருப்பி அனுப்புகிறார். டி.என்.பி.எஸ்.சி.யில் தலைவர் நியமிக்கப்பட்டால்தான், தகுதியான நபர்களுக்கு வேலை கிடைக்கும். கவர்னர் ரவி ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவரைப் போல செயல்படுகிறார் என்று ஜனாதிபதியிடம் தமிழக எம்.பி.க்கள் புகார் மனு வழங்கியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கவர்னர் ரவி போட்டி அரசாங்கம் நடத்துகிறார். கவர்னரை கண்டித்து பல கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. விரைவில் மக்கள் நலன் கருதி தமிழக மக்களே கவர்னரை கண்டித்து போராட வேண்டிய நிலை வரும்.

 

காலை உணவு விரிவுபடுத்தும் திட்டத்தை வருகிற 25-ந் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்துக்கு கட்சி பாகுபாடின்றி அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் அந்தந்த மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் கடிதம் அனுப்பி உள்ளார். அவரின் நடவடிக்கை பாராட்டத்தக்கது.

 

தமிழக மீனவர்கள் உயிருக்கும், பொருட்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இலங்கைக்கு இந்தியாவும், தமிழகமும் தொடர்ந்து உதவுகிறது. ஆனால், இலங்கை கடற்படையும், இலங்கை கடல் கொள்ளையர்களும் தமிழக மீனவர்களைத் தாக்குவதும், அவர்களது படகு, வலை உள்ளிட்டவற்றை கொள்ளை அடித்துச் செல்வதை மத்திய அரசு தடுத்து நிறுத்தி, மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

 

நீட் தேர்வை காங்கிரஸ் அரசு கொண்டு கொடுத்ததாகவும், கச்சத்தீவை இந்திரா காந்தி கொடுத்தாகவும் கூறுகிறார்கள். இதையெல்லாம் சரிசெய்ய வேண்டும் என்றுதானே பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது. எனவே மாநிலங்களின் தேவையை அறிந்து தற்போதைய மத்திய அரசு செயல்பட வேண்டியது கடமை என்பதை உணர வேண்டும். அ.தி.மு.க. மாநாட்டில், நீட் தேர்வு விலக்கு பெற தி.மு.க. அரசு முயலவில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலும் நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு பெற, அப்போதைய அமைச்சர் விஜயபாஸ்கர் போன்றோர் பலமுறை மத்திய அரசை அணுகினர். அதுபோல, தி.மு.க. அரசும் முயன்று வருவதை உணர வேண்டும். நீட் தேர்வு பொது பிரச்சனை. அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

 

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி கர்நாடக மாநிலம் வறட்சி காலத்தில் எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்று வழிகாட்டி உள்ளதோ, அதன்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். தி.மு.க. கூட்டணியில் எந்தவித சலசலப்பும் இல்லை. பலமாகத்தான் உள்ளது. அதனால் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்