
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி முட்டுக்கட்டைப் போடுவதாக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 8ஆம் தேதி (08.04.2025) பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதில், ‘தமிழக அரசின் சார்பில் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை விடுவிக்க வேண்டும் என்ற மசோதா உட்பட 10 மசோதாக்களை நிறுத்தி வைத்த ஆளுநரின் செயல் சட்டப்படி தவறானது. 2வது முறையாக மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டபோது ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறார்.
ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது திருப்பி அனுப்பி வைக்கும் முடிவை ஆளுநர்கள் ஒரு மாதத்திற்குள் எடுக்க வேண்டும். இந்த 10 மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்த ஆளுநரின் முடிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்கிறது. அந்த 10 மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக எடுத்துக் கொள்ளப்படும்’ எனத் தெரிவித்திருந்தது. எனவே கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி 10 மசோதாக்களும் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. இதனையடுத்து 10 மசோதாக்களும் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நாளான 2023ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதியே ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது.
இதன் மூலம் தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருந்து வந்த ஆளுநருக்கு பதிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இனி பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. வரும் 16ஆம் தேதி (16.04.2025 - புதன்கிழமை) மாலை நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்துவதது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.