
தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் இன்று (18/04/2021) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருடன் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், ஞாயிற்றுக்கிழமைத் தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பில் கூறியிருப்பதாவது, "ஏப்ரல் 20- ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10.00 மணி முதல் காலை 04.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின் போது தனியார் மற்றும் பொது போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதி இல்லை. மருத்துவம் போன்ற அவசர தேவைக்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி போன்றவை அனுமதிக்கப்படும். பெட்ரோல், டீசல் பங்க்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். விமானம், ரயில் நிலையங்களுக்குச் செல்ல மட்டும் இரவு நேரத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் ஆலைகள் இரவு நேர ஊரடங்கின் போது செயல்பட அனுமதி அளிக்கப்படும். தனியார் நிறுவன இரவு காவல் பணியில் ஈடுபடுவோர் வீட்டிலிருந்து பணியிடத்திற்கு சென்று திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலைத் தடுக்க ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் ஞாயிற்றுக்கிழமையில் உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பால், பத்திரிகை விநியோகம், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, சரக்கு வாகனத்திற்கு ஞாயிற்றுக்கிழமை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விவசாய விளைப்பொருள், பெட்ரோலியப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முழு நேர ஊரடங்கு நாளில் உணவகங்கள் காலை 06.00 மணி முதல் 10 மணி வரையும், நண்பகல் 12.00 மணி முதல் 03.00 மணி வரையும், மாலை 06.00 மணி முதல் 09.00 மணி வரையும் பார்சல் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. பிளஸ் 2 மாணவர்களுக்காக தற்போது நடைபெற்று வரும் செய்முறைத் தேர்வு திட்டமிட்டப்படி நடத்தப்படும்.
அனைத்து கடற்கரைப் பகுதிகளுக்கும், அனைத்து நாட்களுக்கும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்களுக்கும் அனைத்து நாட்களிலும் அனுமதி இல்லை. கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகள் இணைய வழியில் மட்டுமே நடத்த வேண்டும். கல்லூரில், பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே இணைய வழி வகுப்பு நடத்த அறிவுறுத்தப்படுகிறது. கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்." இவ்வாறு அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.