Skip to main content

கரோனா தடுப்பு விதிகளை மீறுவோருக்கு அபராதம் வசூலிக்கும் அறிவிப்பாணைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

Published on 01/12/2020 | Edited on 01/12/2020

 

corona virus penalty case highcourt

 

கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றாதோருக்கு அபராதம் வசூலிக்கும் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட  வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

 

கரோனா ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு, பின்னர் படிப்படியாகத் தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தளர்வுகளைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பதற்காக, கரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அபராதம் விதிக்கும் நடைமுறையைத் தமிழக அரசு அறிவித்து, அதைக் கடந்த செப்டம்பர் 4 -ஆம் தேதி அரசிதழில் வெளியிட்டுள்ளது.

 

சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பின்படி, தனிமைப்படுத்தும் விதிகளை மீறுதல், பொது இடத்தில் முகக்கவசம் அணியாதது, தனி மனித இடைவெளியைப் பின்பற்றாதது, பொதுவெளியில் எச்சில் துப்புதல், முடிதிருத்தகம், ஸ்பா, ஜிம் ஆகியவற்றிற்கான விதிகளைப் பின்பற்றாதது குற்றம் என்றும், அதற்காக 200 ரூபாயில் தொடங்கி 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்க,  புதிய அறிவிப்பு வகை செய்கிறது.

 

1939 -ஆம் ஆண்டின் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தில் கட்டுப்பாடுகளை அமல்படுத்த மாவட்ட ஆட்சியர், காவல்துறை, சுகாதாரத்துறை ஆகியோருக்கு அதிகாரம் இல்லாததால், அவர்களுக்கு அதிகாரம் அளித்து, அந்தச் சட்டத்தில் திருத்தமும் (பிரிவு 76(2)) கொண்டுவரப்பட்டது.

 

அரசிதழில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி, சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த 77 வயதான ஆர்.முத்துக்கிருஷ்ணன் என்பவர், பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கின் விசாரணை, தலைமை நீதிபதி சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில்  நடைபெற்றுவந்தது. 

 

cnc


தமிழக அரசு தரப்பில், கரோனா கட்டுப்பாடுகளை மீறினால் குற்றம் என அறிவித்து, ஏற்கனவே பல அறிவிப்பாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால், அவற்றிற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்யாமல் தொடர்ந்துள்ள இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

 

அரசின் வாதத்தை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, அபராதம் விதிப்பது தொடர்பாக தமிழக அரசின் இந்த முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனத் தெரிவித்து, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்