Skip to main content

ஏழு மாவட்ட விவசாயிகள் வளம் பெற இணைப்புக் கால்வாய் திட்டம்!

Published on 30/08/2018 | Edited on 30/08/2018

 

kovai

   

 சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருச்சி மற்றும் கரூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களிலுள்ள விவசாயிகளின் வாழ்வு வளம் பெற, இணைப்புக் கால்வாய் திட்டத்தினை செயல்படுத்தக் கோரி காவிரி வைகை குண்டாறு இணைப்புக் கால்வாய் நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பினர் வேன் பிரச்சாரப் பயணத்தையும், அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் எழுச்சி மாநாட்டினையும் அறிவித்துள்ளனர்.

 

    தென்மேற்கு பருவமழை காரணமாக இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரித்து மேட்டூர் அணை 23-7-2018 அன்று நிரம்பியது.  அன்று முதல் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து கொள்ளிடம் ஆறு வழியாக வீணாக கடலுக்கு செல்கிறது.  அதிகபட்சமாக வினாடிக்கு 2லட்சம் கன அடி தண்ணீர் வரை கடலுக்கு திறந்துவிடப்பட்டது. மணல் கொள்ளை, பராமரிப்பு இல்லாதது காரணமாக முக்கொம்பு அணை 22-8-2018 அன்று உடைந்தது.

 

   காவிரி நீர் சுமார் 100 டி எம் சி க்கு மேல் கடலுக்கு வீணாகச் சென்றுவிட்டது.  காவிரியில் வெள்ளம் வரும் போது வீணாகும்  தண்ணீரை வறட்சியான திருச்சி கரூர் மாவட்டங்களின் ஒரு பகுதிக்கும்  சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கும் பயன்படுத்தும் திட்டம் 1958ல் உருவானது.  காவிரியில் மாயனூர் கதவணையில் இருந்து 20 மீட்டர் அகலத்திற்கு 258 கி.மீ  தூரம் கால்வாய் வெட்டி கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களின் வழியாக விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகில் புதுப்பட்டி கிராமத்தில் குண்டாறுடன் இணைக்கப்படும். குண்டாறிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் வைப்பாறுடன் இணைக்கப்படுகிறது.

 

இந்தக் கால்வாய் மூலம் 6000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து 10 டி எம் சி கிடைக்கும். இதனால் ஏழு மாவட்டங்களில் உள்ள 8 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். நிலத்தடி நீர் உயரும். 75 லட்சம் மக்களுக்கு  குடிநீர் வசதி கிடைக்கும். வறண்ட பகுதி மக்கள் வாழ்வில் புதிய மாற்றம் நம்பிக்கை ஏற்படும். ஆனால், திட்டம் கிடப்பிலேயே இருப்பதால் ஒரு பக்கம் வெள்ளம் கரைபுரண்டு வீணாக கடலுக்கு செல்கிறது. ஏராளமான உயிர் சேதம்,பொருட்சேதம் ஏற்படுகிறது. நமது பகுதியில் மக்கள் குடிக்க தண்ணீரின்றி வாடுகின்றனர். இதனை தடுக்கவும், உடனே இணைப்புக்கால்வாய் திட்டத்தினை நியைவேற்றவும், இராமநாதபுரம் மாவட்டம் கமுதி குண்டாறு அணையில் இருந்து 18-9-2018 ல் துவங்கி  கரூர் மாயனூர் காவிரி அணை வரை ஒரு வாரம் மக்கள் சந்திப்பு வேன் பிரச்சாரப் பயணத்தினையும், பயணத்தின் முடிவில், அக்டோபர் 8 ல்  புதுக்கோட்டையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர் காவிரி வைகை குண்டாறு இணைப்புக் கால்வாய் நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பினர். இதனால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்