
தமிழக சட்டப்பேரவையில் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி (14.03.2025) தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. இதனையடுத்து வேளாண் பட்ஜெட்டை, வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடந்த மார்ச் 15ஆம் தேதி (15.03.2025) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து துறை ரீதியான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது.
இத்தகைய சூழலில் தான் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில்,மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும் உயர்மட்ட குழுவினை அமைத்து விதி எண் 110ன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அதில், “இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும். உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி குரியன் ஜோசப்பைத் தலைவராகக் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.
இதன் உறுப்பினர்களாக, இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணை வேந்தரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான அசோக் வர்தன் ஷெட்டியும், தமிழக மாநில திட்டக் குழுவின் மேனாள் துணைத்தலைவர் மு. நாகநாதனும் இருப்பார்கள்” எனப் பேசினார். இந்த குழு வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் இடைக்கால அறிக்கையும், 2 ஆண்டுகளில் இறுதி அறிக்கையும் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை - 17.04.2025) மாலை 5 மணிக்கு 20வது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் மற்றும் துறை அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளனர். இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்குதல், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குதல் மற்றும் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடத்திட அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழு தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.