
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் நாளொன்றுக்கு 1500க்கும் மேற்பட்ட பேருந்துகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் செங்கத்தில் இருந்து போளூர் செல்லும் லட்சுமி தனியார் பேருந்து வெகுநேரமாக பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு இயக்கப்படாமல் இருந்ததால் பயணத்திற்காக பேருந்தில் ஏறிய பெரியவர்கள், ஊனமுற்றவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் என அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியதால் நடத்துநரிடம் பேருந்தை இயக்குமாறு கூறியுள்ளனர்.
நடத்துநர் பயணிகளுக்கு என்ன ஆனாலும் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் தான் பேருந்தை இயக்குவோம் என பங்குனி மாதம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கிரிவலம் சென்று முடித்துவிட்டு கிராமங்களுக்கு செல்ல பேருந்தில் ஏறிய பயணிகளிடம் அடாவடியாக மிரட்டும் தோரணையில் பேசியதால் ஆத்திரமடைந்த பயணிகள் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் நலனில் அக்கறை கொள்ளாமல் நேரத்தை மட்டும் கடைபிடிக்கும் தனியார் பேருந்துக்கள் அரசு விதித்த கட்டுப்பாட்டை மீறி அதிக பயணிகளை ஏற்றிச் செல்வது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பெண்களிடம் ஒருமையில் அராஜக பேச்சில் ஈடுபட்ட நடத்துநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.