Skip to main content

40 இடங்களிலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறச் செய்ய உறுதியேற்பதாக பாமக தீர்மானம்

Published on 23/02/2019 | Edited on 23/02/2019

 

பாட்டாளி மக்கள் கட்சி சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரியில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு - புதுவையில் 40 இடங்களிலும் அதிமுக - பா.ம.க - பாஜக கூட்டணியை அமோக வெற்றி பெறச் செய்ய உறுதியேற்போம் என்று அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 

தீர்மானத்தின் விவரம்:- கோவை மாநகரில் 2018-ஆம் ஆண்டு திசம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து மிகவும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

 

Ramadoss


மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், தமிழகத்திற்கான திட்டங்களை அதிக எண்ணிக்கையில் போராடிப் பெறவும் பாட்டாளி மக்கள் கட்சி அதிக எண்ணிக்கையில் மக்களவைக்கு உறுப்பினர்களை  அனுப்ப வேண்டியது அவசியம் என்பதால், மக்களவைத் தேர்தலில் ஒத்தக் கருத்துடையக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது. கூட்டணி கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களுக்கு வழங்கப்பட்டது.
 

அதைத் தொடர்ந்து தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமைத்திருக்கிறது. பொதுவாக தேர்தல் வெற்றிக்கான அடித்தளம்  கூட்டணி என்றால், வெற்றி என்ற இலக்கை நோக்கி கூட்டணிக் கட்சிகளை உயர்த்திச் செல்லும் தூண்களாக இருப்பவை கூட்டணி கட்சிகளிடையே நிலவும் ஒற்றுமையும், ஒன்றுபட்டு பணியாற்றுவதற்கு ஏற்ற மனநிலையும் ஆகும். அந்த வகையில் அதிமுகவுக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இடையிலான கூட்டணி இயல்பான கூட்டணி ஆகும். இந்தக் கூட்டணியில் பாரதிய ஜனதாவும் இணைந்திருக்கிறது; மேலும் பல கட்சிகளும் இணையவுள்ளன. இவ்வாறாக மருத்துவர் அய்யா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள கூட்டணி வெற்றிக் கூட்டணியாக உருவெடுத்திருக்கிறது. இத்தகையக் கூட்டணியை கட்டமைத்ததற்காக மருத்துவர் அய்யா அவர்களுக்கு இப்பொதுக்குழு நன்றிகளைத் தெரிவிக்கிறது. 
 

அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி, அதற்கான முன்நிபந்தனையாக காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்க வேண்டும், நீர்ப்பாசனத் திட்டங்கள், சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, 7 தமிழர்கள் விடுதலை, படிப்படியாக மதுவிலக்கை ஏற்படுத்தும் நோக்குடன் 500 மதுக்கடைகளை மூடுதல், மணல் குவாரிகளை படிப்படியாக மூடுதல், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல், மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் சதியை முறியடித்தல், உழவர்களின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்தல், மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வை ரத்து செய்தல் ஆகிய 10 கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இவற்றில் பெரும்பாலான கோரிக்கைகள் வெகுவிரைவில் நிறைவேற்றப்பட்டு மக்களுக்கு பயனளிக்கும்.
 

இவற்றைக் கடந்து தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை அதிக எண்ணிக்கையில் பெற்றுத் தருதல், காவிரி உள்ளிட்ட ஆற்று நீர் பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமைகளைக் காப்பாற்றுதல், தமிழகத்திற்காக அறிவிக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்படாததால் செயல்படுத்தப்படாமல் கிடப்பில்  போடப்பட்டுள்ள திட்டங்களுக்கு போதிய நிதியைப் பெற்றுக் கொடுத்து உயிரூட்டுதல், தமிழ்நாட்டில் உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை மத்திய அரசின் உதவியுடன் அமைத்தல், கல்வி மற்றும் மருத்துவக் கட்டமைப்புகளை உருவாக்குதல், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மத்திய   தொடர்வண்டித் துறை அமைச்சர்களாக இருந்த போது அறிவிக்கப்பட்டு இன்னும் நிறைவேற்றப்படாமல்  இருக்கும் திட்டங்களை விரைந்து செயல்படுத்துதல், உழவர்கள் நலனுக்கும், இளைஞர்களின் வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதற்கும் ஏற்ற திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை பாட்டாளி மக்கள் கட்சியும், அதன் தோழமைக் கட்சிகளும் செய்தாக வேண்டியிருக்கிறது.
 

தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் நலனுக்குமான இத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மிகவும் அவசியம் அதிகாரம் ஆகும். அந்த அதிகாரத்தைக் கைப்பற்ற அதிமுக, பா.ம.க., பா.ஜ.க கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டியது அவசியம் ஆகும். 2019-ஆம் ஆண்டு  மக்களவைத் தேர்தலில் மருத்துவர் அய்யா அவர்கள் அமைத்த இந்தக் கூட்டணி வெற்றி பெற்றால் தான் தமிழகம் எழுச்சியையும், வளர்ச்சியையும் பெறும். அப்போது தான் மக்கள் வாழ்வு மலர்ச்சியாகும்.
 

இதை உணர்ந்து வரும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து 40 தொகுதிகளிலும் அதிமுக தலைமையிலான அணி வெற்றி பெறுவதற்காக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து கடுமையாக உழைக்க பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழு உறுதியேற்கிறது.  அதுமட்டுமின்றி, கூட்டணி கட்சிகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில் மாநில அளவிலும், தொகுதி அளவிலும் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளையும் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுக்களை அமைக்க நடவடிக்கை எடுக்கும்படியும் கட்சித் தலைமையை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்