Skip to main content

“அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஓரிரு நாளில் தகவல்” - ரங்கசாமி பேட்டி!

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

th


புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் பெரும்பான்மை இழந்ததையடுத்து, முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சரவை ராஜினாமா செய்தது.   

 

இதனிடையே எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் நாராயணசாமி சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “புதுச்சேரி மாநிலத்திற்காக காங்கிரஸ் அரசு புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. மத்திய அரசையும், துணைநிலை ஆளுநரையும் குறை சொல்லிக்கொண்டு இருந்ததை தவிர வேறு எதையும் உருப்படியாகச் செய்யவில்லை. மத்திய பா.ஜ.க அரசை விமர்சித்து பொதுக்கூட்டத்தில் விமர்சித்துப் பேசுவதுபோல் சட்டமன்றத்தில் பேசியுள்ளார் முதலமைச்சர்.
 

காங்கிரஸ் அரசால் மக்களுக்கான எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியவில்லை என்பது அவர்களது கட்சி உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளதிலிருந்தே தெரிகிறது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஓரிரு நாளில் தெரிவிப்போம்" என்றார். இந்தப் பேட்டியின்போது பாஜக மாநிலத் தலைவர் சுவாமிநாதன், அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவர் அன்பழகன் மற்றும் எம்.எல்.ஏக்கள் உடனிருந்தனர். 

 

இதனிடையே  ரங்கசாமியுடன் பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ஆலோசனை மேற்கொண்டார். காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்த நிலையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க ஆலோசனை முக்கியத்துவம் பெறுகிறது. அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக இருகட்சிகளும் சேர்ந்து முடிவெடுக்கும் என நம்பப்படுகிறது. அதேசமயம் எந்த முடிவையும் வெளிப்படையாக இரு தரப்பும் அறிவிக்காததால் புதுச்சேரி அரசியலில் குழப்பம் நிலவி வருகிறது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“முதல்வர் ரங்கசாமியை பாஜக சிறைபடுத்தி வைத்திருக்கிறார்கள்” - தமிழ்வேந்தன் குற்றச்சாட்டு

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Puducherry AIADMK candidate Tamilvendan accuses BJP

புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தமிழ் வேந்தனை நக்கீரன் சார்பில் சந்தித்து பேட்டி கண்டோம். அப்போது அவர் புதுச்சேரி அரசியல் நிலை குறித்தும், தங்களது கட்சி குறித்தும் நக்கீரனிடம் பகிர்ந்துகொண்டதை இங்குக் கேள்வி பதிலாகத் தொகுத்துள்ளோம்...

புதுச்சேரியில் போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் இருக்கிறதாகக் கூறப்படுகிறது, இதற்கெல்லாம் என்ன தீர்வு இருக்கிறது? இது தொடர்பான வாக்குறுதி உங்களிடம் இருக்கிறதா?

வாக்குறுதியே கிடையாது.. நிறைவேற்றிக் காட்டுவோம். சட்ட ஒழுங்கு பிரச்சனை நிறைய இருக்கிறது. காவல்துறையின் கை கட்டப்பட்டுள்ளது. புதுச்சேரி ரவுடிகளின் கோட்டையாக உள்ளது. யார் உயிருக்கும் பாதுகாப்பில்லை. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கம் அதிகமாக இருக்கிறது. சமீபத்தில் கூட சிறுமி படுகொலை செய்யப்பட்டார். மனதை உருக்கிய சம்பவம் அது. ஒரு சிறுமியை 54 வயது பெரியவர் ஒருவரும் 19 இளைஞர் ஒருவரும் சேர்ந்து வன்கொடுமை செய்து படுகொலை செய்துள்ளனர். அவர்கள் தன்னிலை மறந்து கஞ்சாவிற்கு அடிமையானதால் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

தமிழ்நாட்டிலிருந்துதான் புதுச்சேரிக்குள் கஞ்சா வருகிறது. தமிழகத்தில் 10 வருடம் அதிமுக ஆட்சி இருந்தத போது இது போன்று ஏதாவது சம்பவம் நடந்ததா? வடமாநிலத்திலிருந்து தமிழநாட்டிற்கு கஞ்சா வருகிறது; அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வருகிறது. அதனைக் கண்டிப்பாகத் தடுக்க வேண்டும்; தற்போது உள்ள ஆட்சியாளர்கள் தடுக்க தவறிவிட்டார்கள். கட்டப்பட்டுள்ள காவல்துறையின் கையை அவிழ்த்துவிட்டால்தான் தடுக்கமுடியும். இதைப்பற்றியெல்லாம் பாஜகவிற்கு எந்தக் கவலையும் இல்லை. உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு வரவில்லை. அவர்கள் என்ன தப்பு செய்தார்கள்? ஏன் வரவில்லை? முதல்வர் ரங்கசாமி  வரவில்லை. நிவாரணம் கொடுத்தால் போதுமா? இன்றைக்கு அந்தச் சிறுமி உயிரோடு இருந்திருந்தால் வருங்காலத்தில் ஒரு முதல்வராகவோ, ஆட்சியராகவோ ஆகியிருப்பார்.  

எல்லாம் செய்துவிட்டு நிவாரணம் கொடுத்துட்டா முடிஞ்சுடுமா? யாருக்குச் சார் உங்க பணம் வேணும். ஏழைகளுக்குச் சம்பாரிக்கும் திறமை இருக்கிறது. நீங்க என்ன எங்களுக்குப் பணம் தருவது. உங்கள் பணம் எங்களுக்கு வேண்டாம். எங்களைப் படிக்க விடுங்க. ஒருகாலத்தில் கல்வியில் பாண்டிச்சேரி எங்கையோ இருந்தது; ஆனால் இன்று இந்தியாவிலேயே பின் தங்கியுள்ளது. இவர்கள் கல்விக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறது இல்லை.

ஒருபக்கம் முதல்வர் ரங்கசாமி பாஜகவுடன் கூட்டணி, மறுபக்கம் வைத்தியலிங்கம் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி இப்படி இருவரும் பலமான கூட்டணி அமைத்ததால் அதிமுக தனித்து விடப்பட்டுள்ளதா?

ரங்கசாமி - பாஜக ஒரு பலமான கூட்டணி என்று கூறுவது தவறு. ரங்கசாமியை பாஜக சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.  எங்கள் முதல்வர் ஒரு கூண்டு கிளிபோன்று உள்ளார். அவரை டார்ச்சர் பண்றாங்க பாஜக. கொரோனா சிகிச்சையின் போது முதல்வர் ரங்கசாமி மருத்துவமனையில் இருந்தபோது, பாஜக மூன்று எம்.எல்.ஏக்களை தேர்ந்தெடுத்துவிட்டது. ரங்கசாமியால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  அவரது கட்சி தொண்டர்களே அதிருப்தில் இருக்காங்க. புதுச்சேரியே ஒரே ஆர்.எஸ்.எஸ் மயமா மாறிவிட்டது. அதை மாற்றவேண்டும். இளைஞர்கள் ஒன்றாகச் சேர்ந்து அதனை மாற்றிக்கொண்டிருக்கிறோம். 

வைத்திலிஙகம் இந்தியா கூட்டணி பலமான கூட்டணி கிடையாது. கடந்த தேர்தலில் வைத்திலிங்கம், ஜான்குமார் உள்ளிட்ட 9 எம்.எல்.ஏக்கள் காங்கிரசில் இருந்தார்கள். அன்றைக்குக் காங்கிரஸ் பேரியக்கம் ஒன்றாக இருந்தது. அதிலிருந்து பிரிந்துவந்தவர்கள்தான் தறபோது பாஜகவில் இருக்கின்றனர். அப்படியிருக்கும் போது இந்தக் கூட்டணி எப்படி பலமான கூட்டணி என்று சொல்ல முடியும். இவர்கள்தான் பிரிந்துவந்துட்டார்களே என்று பார்த்தால் அதனால் பாஜகவிற்கு பலம் கிடையாது. 

மக்கள் மாறி மாறி கட்சி தாவுபவர்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நமச்சிவாயத்திற்கு 54 வயது இருக்கும்.அதற்குள் 7 கட்சி மாறிவிட்டார். எனக்கு 34 வயதாகிறது. நான் ஒரு கட்சி அதிமுகவில்தான் இருக்கிறேன். 

நமச்சிவாயம் ரங்கசாமியின் நாற்காலிக்கு ஆசைப்பட்டார் என்று கூறப்பட்டது, இதனால் இருவருக்கும் உள்ளே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. ஆனால் தற்போது ரங்கசாமி நமச்சிவாயத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நான் முதலே கூறியதுபோல் எங்க முதல்வர் ரங்கசாமியைக் கூண்டுக் கிளியாக மாற்றிவிட்டனர். நமச்சிவாயம் நடுவில் நிற்கிறார். முதல்வர் ரங்கசாமி ஒரு ஓரமாக நின்றுகொண்டிருக்கிறார்.  பார்ப்பதற்கே பாவமாக இருக்கிறது. என்.ஆர்.காங்கிரஸ் எங்களுடன் கூட்டணியிலிருந்த வரைக்கும் நல்ல கட்சி. அதிமுக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி என்றாலே மக்களுக்குப் பிடிக்கும். இருகட்சிகளும் கூட்டணி என்று அறிவித்துவிட்டாலே அவர்கள்தான் ஆளும் கட்சியாக மாற்றிவிடுவார்கள். ஆனால் பாஜக உள்ளே வந்த பிறகு முதல்வர் ரங்கசாமிக்கு அதிகமான இழி பெயர்கள் வந்துள்ளது. அவரால் மக்களுக்கு எதுவும் நல்லது செய்யமுடியவில்லை, அப்படி இருக்கும் போது கூட்டணியில் இன்று தொடர்கின்றனர். அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. உதாரணமாக மாணவர்களுக்கு இலவச சைக்கிள் கொடுத்ததில் ஊழல் நடந்துள்ளது. இப்படிப் பல சம்பவங்கள் நடந்துள்ளது. இதனை எதிர்த்து அதிமுக மட்டுமே குரல்கொடுத்துள்ளது. மற்ற யாரும் கண்டுகொள்வதில்லை, கமிஷனுக்கு ஆசைப்படுகிறார்கள்.

Next Story

“இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில்...” - கமல்ஹாசன் கண்டனம்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
kamal about pudhucherry child issue

புதுச்சேரி மாநிலம் சோலை நகர் பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த சனிக்கிழமை வழக்கம் போல தெருவில் தனது நண்பர்களுடன் விளையாட சென்றார். ஆனால், சிறுமி மாலை ஆகியும் வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடினர். சிறுமி காணாமல் போனது குறித்து முந்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். போலீசார் அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சிறுமியை தேடி வந்தனர். அதனடிப்படையில் நேற்று மதியம் அங்குள்ள அம்பேத்கர் நகர் சாக்கடை கால்வாயில் சந்தேகத்திற்கிடமாக மூட்டை ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் மூட்டையை கைப்பற்றிப் பிரித்து பார்த்த போது அதில் சிறுமி கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்தார்.

இந்த கொலையில் கஞ்சா குடிக்கும் இளைஞர்கள் சிறுமியின் கை கால்களை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ளனர் என சிறுமியின் தந்தை பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விசாரணையில் அந்த பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டபோது, சிறுமி மயங்கி விழுந்துள்ளதால் அவரை கொலை செய்து மூட்டை கட்டி சாக்கடையில் வீசி இருப்பது தெரியவந்தது. 

இந்தச் சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்கள் மூலம் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், எங்கே போகிறோம்? என்ற தலைப்பில் நிறைய சம்பவங்களின் மேற்கோள்காட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள். உலகின் பாதி நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணை ராஞ்சியில் ஒரு கும்பல் வன்புணர்வு செய்திருக்கிறது. மங்களூருவில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ளது. சென்னையில் காதல் திருமணம் செய்துகொண்ட பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் பெண்ணின் சகோதரனால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளான். குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. 

ஒரு சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் எனும் ஆழமான ஐயத்தை இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் வளர்ச்சி, வல்லரசு, நல்லாட்சி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம். மறுபுறம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற, போதையின் பிடியில் சீரழிகிற, சாதி மத வெறி பிடித்தாட்டுகிற சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம். மானுட நேயத்தைத் தொலைத்துவிட்டு மிருக நிலைக்குத் திரும்புவதை வளர்ச்சி என்று கருத முடியுமா? குற்றங்கள் எதுவாயினும், அதன் காரணிகள் எவையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குப் பின்னாலும் இருப்பது மனிதத்தன்மையை மரத்துப்போகச் செய்யும் போதைவஸ்துகள்தான். போதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பது நிதர்சனம். இந்தச் சீரழிவை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது. போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும். சமூகத்தைச் சீரழிக்கும் போதைக் கும்பலுக்கு எதிராக நம் எல்லோரது கரங்களும் இணையட்டும். போதையில்லா தேசத்திற்குப் பாதை போட ஒவ்வொருவரும் களமிறங்குவோம்” என குறிப்பிட்டுள்ளார்.