"மதம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அரசு மூக்கை நுழைக்க கூடாது, எல்லா மதத்தையும் சமமாக பார்க்க வேண்டும்," என தருமபுரம் ஆதீனத்தை பார்த்து ஆசிபெற்றுவிட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்திருந்த எடப்பாடி பழனிச்சாமி, திருக்கடையூர் கோயில், திருவெண்காடு கோயில், வைத்தீஸ்வரன் கோயில் என நவக்கிரக ஸ்தலங்களில் சாமி தரிசனம் செய்தார். பிறகு வைத்தீஸ்வரன் கோயிலில் நடந்த சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ பாரதியின் மகன் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திவிட்டு, அங்கிருந்து தருமபுரம் ஆதீனம் சென்று ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது பட்டின பிரவேச விவகாரம் குறித்தும், இன்றைய அரசியல் நிலைபாடுகள் குறித்தும் ஆதீனத்திடம் பேசிவிட்டு வெளியே வந்தவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அவரிடம் சிதம்பரம் கோயில் விவகாரம் குறித்து கேட்டதற்கு, "மதம் சம்பந்தப்பட்டது, கோயில் சம்பந்தப்பட்டது, அது குறித்து முழு விவரம் வந்த பிறகே அறிக்கை விட முடியும். எல்லா மதத்தையும் சமமாக பார்க்க வேண்டும். மதத்தில் யாரும் மூக்கை நுழைக்க கூடாது. ஆண்டாண்டு காலமாக அவர்களுக்கென இருக்கும் வழிமுறைகளில் நாம தலையிடக்கூடாது. கோயில்களுக்கு என வழிமுறை இருக்கு, அவங்க நிகழ்ச்சி நடத்துவதற்கு சட்ட ரீதியாக பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது" என்றார்.
அதன் பிறகு ஆதீன விவகாரம் குறித்து பேசிய அவர், "இந்த அரசாங்கம் திட்டமிட்டே ஆதீனம் விவகாரத்தில் மூக்கை நுழைக்கிறது; அது கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே, திமுக ஆட்சியின் போதும் பிறகு அதிமுக ஆட்சியின் போதும் பட்டினப்பிரவேசம் மிகச் சிறப்பாக நடந்தது. சுமார் 500 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த இந்த பட்டினபிரவேசத்தை திடீரென ஆட்சிக்கு வந்த ஜோரில் திமுக அரசு திட்டமிட்டே தடை செய்ய முயற்சித்தது. அதை கண்டித்து நாங்கள் குரல் கொடுத்தோம். சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். பட்டினப்பிரவேசம் பிறகு சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது" என்றார்.
இதன் பிறகு, பட்டினப்பிரவேசத்திற்கு வருங்காலத்தில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என அரசு கூறியது, அதிமுக, சசிகலா, தினகரன் ஆகியோர் பற்றிய கேள்விகளை பத்திரிகையாளர்கள் எழுப்பினர்.
இவற்றுக்கெல்லாம் பதில் அளித்த அவர், “அப்போது (பட்டினப்பிரவேசம்) திமுக ஆட்சியில் இருக்கிறதா என பார்ப்போம். தினகரன், தனிக்கட்சி துவங்கி சுருங்கி விட்டார். சசிகலா அதிமுகவில் உறுப்பினராக கூட இல்லை. அவருக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமே இல்லை. இனிமேலாவது இந்த கேள்வியை தவிர்க்க முயற்சிங்கள்” எனத் தெரிவித்தார்.