ஆணும் பெண்ணும் சமம் என்பதற்கு உதாரணமாக உடலில் சரி பாதியில் ஆணையும் பெண்ணையும் கொண்டுள்ள சிவனுக்கு ரிஷிவந்தியத்தில் அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயரில் பிரபல கோவில் உள்ளது. இப்படிப்பட்ட ரிஷிவந்தியம் தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ.வும் கட்சியின் மாவட்டச் செயலாளருமான கார்த்திகேயன் மீண்டும் போட்டியிடுகிறார்.
கடந்த ஐந்தாண்டுகள் மக்கள் பணியில் தீவிரம் காட்டியவர். அதே போன்று கட்சிக்காரர்களும் இவரால் வளம் பெற்றனர். தொகுதியில் கல்லூரி கொண்டு வந்தது, வேலைவாய்ப்பு முகாம் நடத்தி அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்தது ஆகியவை தன் வெற்றிக்கு கைகொடுக்கும் என்ற தெம்போடு திமுக வேட்பாளர் கார்த்திகேயன் வாக்கு கேட்டு வலம் வந்துகொண்டிருக்கிறார். இவருக்கு ஆதரவாக விசிக, காங்கிரஸ் ஆகிய கூட்டணிக் கட்சியினரும் கடுமையாக உழைத்து வருகிறார்கள்.
ரிஷிவந்தியம் பெயரில் தொகுதி உள்ளது. ஆனால், ரிஷிவந்தியம் பகுதியில் உள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்கள் பகுதியில் முக்கியமான திட்டங்களை நிறைவேற்றவில்லை. திமுக எம்.எல்.ஏ. மட்டுமல்ல, இதற்கு முந்தைய தேமுதிக தலைவர் விஜயகாந்த் எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும் பெரிய அளவில் இந்தப் பகுதியில் எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்ற குறைபாடு மக்கள் மத்தியில் பலமாக எதிரொலிக்கிறது .
திமுக வேட்பாளரை எதிர்த்து அதிமுக சார்பில் எஸ்.கே.டி. சந்தோஷ் என்ற இளைஞர் களம் இறக்கப்பட்டுள்ளார். இவர் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பொறுப்பில் உள்ளவர். இவருக்கும் தொகுதியில் நல்ல அறிமுகம் உள்ளது. அதோடு பாமக வாக்குகள் கணிசமான அளவில் இவருக்கு கை கொடுக்கும் என சொல்லப்படுகிறது. திமுக வேட்பாளர் தொகுதியில் செலவில் தாராளம் காட்டி வருகிறார். ஆனால் அதிமுக வேட்பாளர் சந்தோஷ் அந்த அளவிற்கு தாராளம் காட்டவில்லை என்ற குறை அந்தக் கட்சியின் உள்ள அடிமட்ட தொண்டர்கள் வரை எதிரொலிக்கிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்முறையாக 2006இல் விருத்தாசலத்திலும், இரண்டாவது முறையாக இந்தத் தொகுதியிலும் எம்.எல்.ஏ.வாக மக்கள் வெற்றிபெற வைத்தனர். ஸ்டார் அந்தஸ்தைப் பெற்ற தொகுதி ரிஷிவந்தியம். ஆனால் இந்தமுறை தேமுதிக, கூட்டணி கட்சியான அமமுகவிற்கு விட்டுக்கொடுத்துள்ளது. அதன் வேட்பாளராக பிரபு சிவராஜ் போட்டியிடுகிறார். பிரபுவின் தந்தை சிவராஜ், காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த தொகுதியில் மூன்று முறை எம்எல்ஏவாக இருந்தவர். அவருக்கென்று தொகுதியில் தனித்த செல்வாக்கு உள்ளது. மக்கள் நீதி மய்யம் சார்பில் சண்முகசுந்தரம், நாம் தமிழர் கட்சி சார்பில் சுரேஷ் மணிவண்ணன் ஆகியோரும் போட்டியில் உள்ளனர்.