Skip to main content

' யார் விரும்புகிறார்களோ இல்லையோ?'-ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி 

Published on 15/05/2025 | Edited on 15/05/2025
ops

ஓ.பன்னீர்செல்வம் அவருடைய ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் தற்போது செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசுகையில், ''2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கின்ற நாம் எந்த மாதிரியான முடிவுகளை எடுத்தால் இந்த இயக்கத்தை தோற்றுவித்த, உருவாக்கிய நிறுவனர் தலைவர் எம்ஜிஆருக்கும், இயக்கத்தை யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக உருமாற்றி தந்த ஜெயலலிதாவிற்கும் நற்பெயர் கிடைக்கும் என்பதனை கருத்தில்கொண்டு இன்றைக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகிகளை அழைத்து கருத்துக்களைக் கேட்டு பதிவு செய்திருக்கிறோம்.  பதிவு செய்ததன் அடிப்படையில் 38 வருவாய் மாவட்டங்கள் தமிழகத்தில் இருக்கிறது. அந்த 38 மாவட்டங்களில், கழக அமைப்பு ரீதியாக 82 மாவட்டங்கள் இருக்கிறது. நேரடியாக சென்று ஒவ்வொரு மாவட்டத்திலும் கழக நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி 15 தினங்களுக்குள் அவர்களுடைய கருத்துக்களையும், அங்குள்ள தொண்டர்களின் கருத்துக்களையும், அங்குள்ள மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து எங்களுடைய நிலையான நீடித்த முடிவை; நல்ல முடிவு அறிவிப்போம். இதற்காகத்தான் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது'' என்றார்.

தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், ''எங்களைப் பொறுத்த வரையில் தமிழகத்தில் எம்மாதிரியான அரசியல் சூழ்நிலை இருந்திருக்கிறது எல்லோரும் அறிந்திருப்பீர்கள். எங்களுடைய நிலைப்பாடு நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தான் போட்டியிட்டோம். அந்தக் கூட்டணியில்தான் இன்று வரை இருக்கின்றோம். ராமநாதபுரத்தில் நின்ற பொழுது என்னைத் தோற்கடிக்க நடந்த சூழ்ச்சிகள் எல்லாம் உங்களுக்கு தெரியும். ஆறு ஓ.பன்னீர் செல்வங்களை கொண்டு வந்து நிறுத்தினார்கள். அதுவெல்லாம் உங்களுக்கு தெரியும். அதையெல்லாம் மீறி ஒரு சாதாரண தொண்டன் பலாப்பழம் சின்னத்தில் நின்று 3 லட்சத்து 42 ஆயிரம் ஓட்டுக்களை பெற்று இருக்கிறேன் என்று சொன்னால் எங்களுடைய அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்புக் குழு எடுத்து வைத்திருக்கும் நியாயங்களுக்கு நல்ல தீர்ப்பாகத்தான் மக்களும், தொண்டர்களும் பார்க்கிறார்கள்'' என்றார்.

'அமித்ஷா அதிமுக தலைமையில் தான் தமிழகத்தில் கூட்டணி என சொல்லி இருக்கிறார். ஒருவேளை அதிமுக உங்களை விரும்பவில்லை என்றால் என்ன செய்வீர்கள்' என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓபிஎஸ் ''யார் விரும்புகிறார்கள் விரும்பவில்லை என்றெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. எங்களுடைய நிலைப்பாடு கழகச் செயலாளர்கள்; தலைமை கழக நிர்வாகிகளிடம் கேட்டிருக்கிறோம். மீண்டும் நாங்களே அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று தொண்டர்கள் கருத்துக்களை கேட்க இருக்கிறோம். இதையெல்லாம் கேட்ட பிறகு நல்ல முடிவை அறிவிப்போம். மத்திய அமைச்சர் (அமித்ஷா) இங்கே வந்திருந்தார். ஏன் உங்களை அழைக்கவில்லை என்று நீங்கள் கேள்வியாக கேட்க இருப்பீர்கள் என கேள்விப்பட்டேன். எங்களை அவர் அழைக்காதது வருத்தம் அளிக்கிறது'' என்றார்.

சார்ந்த செய்திகள்