
பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலாஜே.டி.யூ. மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அதே சமயம் அங்கு ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட உள்ளது. இதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி அடிக்கடி பீகாருக்குச் சென்று அங்குள்ள காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் பணியிலும், பல்வேறு மாநாடுகள் மூலமாகக் கட்சிக்குக் கூடுதல் ஆதரவு திரட்டும் முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் பீகார் மாநிலம் தர்பங்காவில் உள்ள அம்பேத்கர் விடுதியில் மாணவர்களைச் சந்தித்துக் கலந்துரையாட ராகுல்காந்தி இன்று (15.05.2025) சென்றார். முன்னதாக மாணவர்களுடன் கலந்துரையாடச் சென்றபோது காவல்துறையினரால் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் காங்கிரஸ் கட்சியினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதாவது வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து ராகுல் காந்தி தொடர்ச்சியாக மாநில அரசைக் குற்றம்சாட்டி வருகிறார். இதன் காரணமாக அங்கு நிலவும் பதற்றத்தைக் கருதிக் காவல் துறையினர் ராகுல் காந்திக்கு அனுமதி மறுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அனுமதி இல்லாமல் ராகுல் காந்தி நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என போலீசார் வலியுறுத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், வயநாடு மக்களவைத் தொகுதியின் உறுப்பினருமான பிரியாங்கா காந்தி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தர்பங்காவில் உள்ள அம்பேத்கர் விடுதியில் மாணவர்களுடன் உரையாடவிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை தடுத்தது மிகவும் வெட்கக்கேடான, கண்டிக்கத்தக்க மற்றும் கோழைத்தனமான செயலாகும். சர்வாதிகாரத்தில் குறியாக இருக்கும் ஜே.டி.யு.-பா.ஜ.க. கூட்டணி அரசாங்கம், எதிர்க்கட்சித் தலைவர் பீகாருக்குச் செல்வது குற்றமா அல்லது தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஏழைகளுக்காகக் குரல் எழுப்புவது குற்றமா என்பதைச் சொல்ல வேண்டும். நீதிக்கும் புரட்சிக்கும் உரிய பூமியான பீகார் மக்கள் இந்த சர்வாதிகாரத்தை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.