
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் சில இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் பெய்த கோடை மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் மின்மயானத்தில் சடலங்களை எரியூட்ட முடியாத சூழல் ஏற்பட்டதால் அவதி ஏற்பட்டது.
நெல்லை மாநகராட்சி சிந்துபூந்துறை பகுதியில் நவீன மின் மயானம் செயல்பட்டு வருகிறது. அங்குள்ள தகனம் மேடையில் ஒரு நாளைக்கு சராசரியாக ஐந்து முதல் பத்து சடலங்கள் எரியூட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் நெல்லையின் பல இடங்களில் கனமழை பொழிந்தது. இதனால் நெல்லை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. நவீன மின் மயானம் உள்ள பகுதியிலும் மின்தடை ஏற்பட்டது.
ஏற்கனவே சம்பந்தப்பட்ட நவீன மின் மயானத்தில் இருந்த ஜெனரேட்டர் பழுதாகி ஆறு மாதமாக ஜெனரேட்டரை சரி செய்யாத நிலையில் ஏற்பட்ட மின்தடையால் சடலங்களை எரியூட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இறுதிச் சடங்கிற்காக வந்திருந்த 8 சடலங்களை எரியூட்ட முடியாமல் மக்கள் தவித்தனர்.